அமலாக்கத்துறை மூலம் மிரட்டல் 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி: பாஜ செயலாளர் மீது உரிய நடவடிக்கை: எஸ்பியிடம் விவசாயிகள் புகார் மனு

சேலம்: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் சேலம் மாவட்ட பாஜ செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் புகார் மனு கொடுத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன்பாளையம் வடக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (75). இவரது தம்பி கிருஷ்ணன் (70). விவசாயிகளான இவர்கள் நேற்று பிற்பகல், சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வக்கீல் அரங்க செல்லதுரை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா உள்ளிட்ட சிலருடன் வந்தனர்.

அங்கு விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உடன் பிறந்த சகோதரர்களான எங்களுக்கு ராமநாயக்கன்பாளையம் வடக்குக்காடு பகுதியில் தந்தை பாகம் பிரித்துக் கொடுத்த 6.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கண்ணையன் பெயரில் 2.65 ஏக்கரும், கிருஷ்ணன் பெயரில் 3.45 ஏக்கரும் இருக்கிறது. எங்களது நிலத்தின் அருகே சேலம் கிழக்கு மாவட்ட பாஜ செயலாளர் குணசேகரனின் தந்தைக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிக் கொடுத்தோம்.

இதனால், அவர்கள் இங்கு வந்து குடியேறினர். எங்களுடன் நல்ல முறையில் பாஜ நிர்வாகியின் குடும்பத்தினர் பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உங்களுக்கு வயதாகிவிட்டதால், இந்த 6.5 ஏக்கர் நிலத்தையும் என்னிடம் கொடுத்து விடுங்கள் என பாஜ நிர்வாகி கேட்டு வருகிறார். இதற்காக பல வகைகளில் மிரட்டி அந்த நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி எங்களது பெயருக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து சம்மன் வந்தது. அந்த சம்மனில் சாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் மனவேதனை அடைந்தோம்.

அந்த சம்மனை எடுத்துக்கொண்டு சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை 5ம் தேதி இருவரும் ஆஜரானோம். எங்களது வக்கீல்களை அனுமதிக்கவில்லை. பாஜ செயலாளரின் தூண்டுதலின் பேரில்தான், அமலாக்கத்துறையின் சம்மன் வந்துள்ளது. சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் எங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை குறித்து தமிழ்நாடு டிஜிபியிடம் வக்கீல்கள் புகார் கொடுத்துள்ளனர்.

தற்போதும் பாஜ செயலாளர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். அதனால், எங்களது நிலத்தில் நாங்கள் தொடர்ந்து சாகுபடி செய்யவும், அந்த பாஜ செயலாளரிடம் இருந்து நிலத்தையும், எங்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இப்புகார் மனுவை பெற்ற மாவட்ட எஸ்பி அருண்கபிலன், உரிய விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதேபோல் பாஜ செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மா.கம்யூ னிஸ்ட் கட்சி சார்பிலும் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* எங்கள் சாதி அமலாக்கத்துறை அதிகாரிக்கு எப்படி தெரியும்?
சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த விவசாயி கிருஷ்ணன் கூறுகையில், ‘‘எங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க பாஜ செயலாளர் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவரது தூண்டுதலில்தான், அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனில் எங்களது சாதியை குறிப்பிட்டுள்ளனர்.

நாங்கள் அந்த சாதி தான் என்பது எப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரியும்?. பாஜ செயலாளர் கூறி தான் அவர்களுக்கு தெரிந்திருக்கும். சாதி பெயரை குறிப்பிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய விசாரணை நடத்துவதாக எஸ்பி கூறியிருக்கிறார்,’’ என்றார்.

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது