மதுரை ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்தை வரும் 24ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி


மதுரை: மதுரை அருகே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்து பார்வையிட்டார். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்த்து வருகிறேன். அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த போட்டியை துவக்கி வைத்துள்ளேன். சென்ற ஆண்டும் அமர்ந்து போட்டியை பார்த்தேன். இந்த முறையும் வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இந்த ஜல்லிக்கட்டை பார்க்கும்போது, தமிழர்களின் வீர விளையாட்டாக மட்டுமல்லாது, மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு கிடைத்த விளையாட்டாக பார்க்கிறேன்.

பல்வேறு அமைப்புகளும், ஒன்றிய அரசும் சேர்ந்து இந்த ஜல்லிக்கட்டை முடக்க பார்த்தனர். இதனை எதிர்த்து மக்கள் சென்னை மெரினாவில் உட்கார்ந்தனர். அதற்கும் முன்பே மக்கள் போராட்டத்தில் இறங்கிய களம், இந்த களம்தான். இது சரித்திரமிக்க களம். மதுரை அருகே, 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி துவக்கி வைக்கிறார். ஆண்டு முழுவதும் ஐபிஎல் விளையாட்டுகளை போல ஜல்லிக்கட்டு போட்டிகளையும் நடத்தலாம் என்ற யோசனை உள்ளது.

வெற்றி பெறும் வீரர்களுக்கான வேலைவாய்ப்பு உள்பட விளையாட்டு துறையில் கோரிக்கைகள் உள்ளன. முதன்முதலாக 7 பேருக்கு வேலை கொடுத்தோம். அதற்கான பட்டியல் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இக்கோரிக்கையை கொண்டு போய் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கூட்டம் சேராததால் மறுக்கா மறுக்கா சுற்றுப்பயணத்துக்கு திட்டமிடும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி