தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காவிட்டாலும் அதிருப்தி இல்லை: ஆந்திர அமைச்சர் ரோஜா பேட்டி


திருமலை: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காவிட்டாலும் அதிருப்தி இல்லை என்று அமைச்சர்-நடிகை ரோஜா தெரிவித்தார். ஆந்திர மாநிலம் குண்டூரில் மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன் பல இடங்களில் தற்போதைய எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு மாற்றாக வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்கக்கூடிய முடிவு. எனவே இதில் யாருக்கும் எந்தவித அதிருப்தியும் இல்லை.

நகரி தொகுதியில் வாய்ப்பு வழங்காவிட்டாலும் அதனை நான் ஏற்பேன். ஒரு முறையாவது எம்எல்ஏவாக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் 2 முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து தற்போது அமைச்சராகவும் பதவி கொடுத்துள்ளார். இதுவே மக்களுக்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நகரி தொகுதியில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என நான் நம்பவில்லை. இருப்பினும் அவ்வாறு இருந்தால் அதனை எந்தவித அதிருப்தியும் இல்லாமல் ஏற்பேன். தற்போது பதவியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் ஜெகன்மோகன் முகத்தை வைத்து ஜெயித்துள்ளோம்.

எனவே அவரவர் பலம், பலவீனம் என்ன என்பது ஜெகன்மோகனுக்கு தெரியும். முதல்வர் எடுக்கும் முடிவு அனைத்தும் கட்சியின் நன்மைக்கே. கட்சிக்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் தகுதிக்கேற்ப பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்