அறநிலையத்துறை கோயில் மற்றும் கல்லூரியில் காலி பணியிடங்களை நிரப்ப 2 மாதத்திற்குள் நேர்முக தேர்வு: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: அறநிலையத்துறை கோயில் மற்றும் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2 மாதத்திற்குள் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே 15 முதுநிலை கோயில்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கூடுதலாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய 5 இடங்களில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: 20 கோயில்களுக்காக ஆண்டுதோறும் ரூ.25 கோடி செலவிடப்பட இருக்கிறது. நாள் முழுவதும் பிரசாத திட்டத்தால் ஒரு நாளைக்கு 92 ஆயிரம் பக்தர்கள் உணவருந்துகிறார்கள்.

இதற்கான செலவு மட்டும் ரூ.100 கோடி. தைப்பூசம் திருநாளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கின்ற நிகழ்வும் இந்த ஆட்சியில் தொடங்கப்பட்டிருக்கிறது. பக்தி பசியோடு வருகின்ற இறையன்பர்கள் வயிற்றுப் பசியோடு இருகக்கூடாதென்று, மக்களை பசியாற செய்து இருப்பதால் முதலமைச்சர் அன்னதானப் பிரபு என்று அழைக்கப்படுகிறார். உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி தொல்லியல் துறை சார்ந்த அமைப்பாளர்களும், நீதிமன்ற குழு சார்ந்த அதிகாரிகளும் சிதம்பரம் நடராசர் கோயிலில் கனக சபை மீது ஏறி பொதுமக்கள் வழிபடுவதற்கான அனுமதி வழங்குவதற்காக ஆய்வுகளை செய்திருக்கிறார்கள்.

ஆதாரங்களை திரட்டி சமர்ப்பிக்க இருக்கிறோம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வருகிறபோது நீதிபதியிடம் விதிமீறல்கள் பற்றி முழுமையான விவரங்கள் தெரிவிக்க இருக்கின்றோம் கன்னியாகுமரி திருக்கோயிலிலும் பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கிறது. முறையாக பத்திரிகையில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வர இருக்கின்றன.

நேர்காணல் நடக்க இருக்கிறது. 2 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு (பணிகள்) தலைவர் சிற்றரசு, கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர்கள் மங்கையர்க்கரசி, ரேணுகாதேவி, திருக்கோயில் துணை ஆணையர் நித்யா, மாநகராட்சி மன்ற உறுப்பினர் காமராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு