ஆபாச வீடியோ வெளியிடுவதாக தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய நேர்முக உதவியாளர் கைது: வாரணாசியில் தனிப்படை மடக்கியது

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் வாரணாசியில் பதுங்கி இருந்த அவரது நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ மற்றும் வீடியோ வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக பாஜ பிரமுகர்களான ஆடுதுறை வினோத், சம்பா கட்டளை விக்னேஷ் மற்றும் செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கடந்த 28ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம், ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், செய்யாறு வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அகோரம் மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கடந்த மார்ச் 15ம் தேதி மும்பை சென்று அகோரத்தை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைதான வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர்.
அதேபோல் அகோரமும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளரான திருவையாறு செந்திலை 4 மாதங்களாக தனிப்படை போலீசார் தேடி வந்தநிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் செந்தில் பதுங்கி இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த செந்திலை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை மயிலாடுதுறைக்கு பாதுகாப்புடன் அழைத்து வருகின்றனர்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு