ஆர்வமே வெற்றிக்கான உன்னத வழி.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.அந்த ஆய்வின் நோக்கமே உலகில் உள்ள மனிதர்களில் எத்தனை சதவீதம் பேர் தங்களது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாமாக முடிவெடுக்கிறார்கள், செயல்படுகின்றார்கள் என்பதுதான்.இந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது.ஆம் உலகில் 95 % மனிதர்கள் மற்றவர்கள் எந்த வழியில் செல்கின்றார்களோ அந்த வழியில் செல்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அதாவது செம்மறி ஆட்டுக்கூட்டம் என்று சொல்வோமே அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள்.இந்த ஆடுகள் ஒன்றாக மந்தையாகச் செல்வது போலவே இத்தனை சதவீத மனிதர்களும் இயங்குகின்றார்கள் என்கிறது இந்த ஆய்வு.

இந்த வகை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பிறருக்காக அல்லது மற்றவர்கள் எடுத்துள்ள வாழ்ந்து சென்றுள்ள வழிகளின் அடிப்படையில்தான் எடுக்கின்றார்கள். நாமோ, இந்த இடத்தில் நம்மைச் சுய ஆய்வு செய்து பார்த்துக்கொள்ளலாம்.நமது வாழ்க்கையில் செயல்படுத்திய,செயல்படுத்துகின்ற, பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகின்ற அனைத்தும் நமது தனிப்பட்ட விருப்பம் சார்ந்து அமைகின்றதா? அல்லது மற்றவர்கள் செயல்படுகின்றார்கள் அல்லது பயன்படுத்துகின்றார்கள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளதா? என்று ஒரு நிமிடம் ஆய்வு மேற்கொண்டால் நாம் எந்த ரகம் என்பது புரியும்.லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் 5 % மனிதர்கள் மட்டுமே தங்களது விருப்பப்படியும், தனித்துவத்தின் அடிப்படையிலும் செயல்படுகின்றார்கள் என்பது ஆறுதலான செய்தி. இந்த ஐந்து சதவீதம் தான் பல சமயம் மாற்றுச் சிந்தனையை, மாற்றம் தருகின்ற வாழ்க்கையை உலகிற்கு காட்டி சாதித்து வருகிறார்கள். இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் வளர்ந்தவர் டாக்டர். மேகா பார்கவா.சிறுவயது முதலே மருத்துவப் படிப்பு இவரது கனவாக இருந்தது. இவருடைய அம்மா பள்ளி ஒன்றின் முதல்வராக பணியாற்றி வந்தார். மேகாவிற்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுவதற்கு அவரது தாய் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.பள்ளி படிப்பில் சிறந்து விளங்கி மும்பை பல் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் சேர்ந்து படித்து பல்மருந்துவராக உருவானார். அதன் பிறகு மேகா பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். ஆனால் மக்கள் சேவையில் ஆர்வம் இருந்ததால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உயர் அதிகாரியாக வேண்டும்,மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார். மருத்துவராக இருந்து கொண்டு ஏன்? சிவில் சர்வீஸ் தேர்வை எழுத வேண்டும் என்று பலரும் வினவினார்கள். ஆனால் மேகா சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்ந்த பணியை அடைய விரும்புகிறேன் என்றார். மாலை வரை மருத்துவமனையில் வேலை. அதன் பிறகு, தேர்விற்கு தீவிர பயிற்சி.இப்படியே இவரது நாட்கள் கடந்தன. விடா முயற்சியுடன் தேர்வுக்கு தயாரானார். எந்த ஒரு பயிற்சி வகுப்பிற்கும் செல்லாமலேயே மேகா சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்திய வருவாய் துறையில் சேர்ந்தார்.

அக்கவுண்டிங்,வரிச்சட்டங்கள் என மேகாவின் கற்றல்விரிவடைந்துகொண்டே போனது. 2012-ம் ஆண்டு முதல் வரி நிர்வாகம் பிரிவில் சேர்ந்தார்.மேலும், இன்வெஸ்டிகேஷன் தொடர்பாக செயல்பட்டது சவால் நிறைந்ததாக இருந்தது என்கிறார் மேகா.தற்போது நிதி அமைச்சகத்தின் வருமான வரி இணை ஆணையராக இருக்கும் மேகா பார்கவா அரசாங்கத்தால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இ-சரிபார்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.மேகாவின் சகோதரி சமர்ப்பணன் என்கிற என்ஜிஓ தொடங்கினார். இதில் ஆலோசகராக இருந்து மேகா இந்த சமூக முன்னேற்றம் சார்ந்த செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், டெல்லி என பல்வேறு பகுதிகளில் இந்த என்ஜிஓ பணியாற்றி வருகிறது.மேகா ஆலோசனை மற்றும் பல்வேறு முயற்சிகள் மூலம் 26,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வி,மாதவிடாய் சுகாதாரம், பள்ளிகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவி வருகிறார்கள்.பலருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் தருகிறார்கள்.இந்த என்ஜிஓ மூலமாக குழந்தைகளின் படிப்பிற்கு கல்விஉதவிதொகைகளையும் வழங்கி வருகிறார். மின்சார வசதி இல்லாத கிராமங்களில் சோலார் விளக்குகளை பொருத்தியுள்ளனர். பெண்களுக்கு மக்கும்தன்மை கொண்ட சானிட்டரி நாப்கின்களை விநியோகம் செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து மருத்துவ சேவைகளையும் புரிந்து வருகிறார்.வேலை,சமூக சேவை இரண்டையும் எப்படித் திறம்பட சமாளிக்கமுடிகிறது என்ற கேள்விக்கு மேகா தெரிவித்தது என்னவென்றால், ஒரு விஷயத்தை செய்யவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் அதற்கான நேரத்தை நம்மால் நிச்சயம் ஒதுக்கமுடியும்.மக்களுக்கு உதவும்போது கிடைக்கும் மனதிருப்தி வேறு எதிலும் கிடைக்காது. குழந்தைகளின் முகத்தில் தென்படும் புன்னகைதான் தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாக டானிக் என்கிறார் மேகா.தனக்கு பிடித்த மருத்துவ படிப்பை படித்து பல் மருத்துவராகி, அதன் பின்பு சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் தன்னை சமூக அக்கறையாளராக மாற்றிக்கொண்டு சாதித்து வரும் மேகாவின் வாழ்க்கை ஊக்கப்படுத்தும் உன்னத பாடமாகும்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு