சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொழில்நுட்ப திருவிழா நிறைவு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு

திருப்போரூர்: சென்னை விஐடி வளாகத்தில் சர்வதேச “டெக்னோ விஐடி -24’’ என்ற தொழில்நுட்ப திருவிழா கடந்த 19ம்தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் ரோபோ ஷா, டிரோன் ஷோ உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில், நாடு முழுவதிலும் இருந்து முன்னணி கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளை கண்டு ரசித்தனர். இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன் பேசுகையில், `தமிழகத்திற்கு அண்மையில் ரூ.7,600 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தமிழகம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் மாநிலம், செயற்கை நுண்ணறிவின் வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், நாம் அதற்கு ஏற்றாற்போல் நம் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், தமிழக அரசு மாணவர்களின் தொழில்நுட்ப திட்டங்களை வரவேற்கிறது. சிறந்த திட்டங்களாக இருந்தால் தேவையான வழிகாட்டுதலை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. இவை குறித்து மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஸ்டார்ட்அப் டி.என் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுக்கூடம் தமிழகத்தில் அமைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும் என்றார். பின்னர், கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட ஸ்வர்ணபாரத் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் இமானி தீபா வெங்கட் பேசினார். இதனையடுத்து, தொழில்நுட்ப போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். நிறைவு விழாவில் சென்னை விஐடியின் இணை துணை வேந்தர் டி.தியாகராஜன், வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், சென்னை விஐடியின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்