Monday, September 16, 2024
Home » சர்வதேச சந்தையிலும் அதிரடியாக குறைந்த தங்க விலை பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் சவரனுக்கு ரூ.2200 சர்ரென சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சர்வதேச சந்தையிலும் அதிரடியாக குறைந்த தங்க விலை பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் சவரனுக்கு ரூ.2200 சர்ரென சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

by Ranjith
Published: Last Updated on

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் நேற்று மாலை ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2200 அதிரடியாக குறைந்தது. சர்ரென குறைந்த இந்த விலை குறைப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. பட்ஜெட் அறிவிப்பு ஒரு பக்கம் என்றால் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையிலும் அது எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நேற்று மாலை ஒரு சவரனுக்கு 2,200 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் தங்கம் 52,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.275 குறைந்து ரூ.6550க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேகமாக உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தங்க நகை விற்பனையாளர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘ஒரு பக்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதுவே இந்தியாவில் தங்கம் விலை குறைய முக்கிய காரணங்கள். இதுவரை 15 சதவீதமாக இருந்த தங்கம், வெள்ளி பொருட்களுக்கான வரி தற்போது 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

You may also like

Leave a Comment

19 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi