சர்வதேச தடகள போட்டி: சிங்கப்பூரில் திருச்சி வீராங்கனை 4 தங்கம் வென்று சாதனை

திருச்சி: சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் புதுக்கோட்டையை சேர்ந்த வீராங்கனை 4 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் நடந்த 44வது தேசிய அளவிலான சிறந்த தடகள வீரர்களுக்கான போட்டியில் பங்கேற்று 400மீ. ஓட்டத்தில் 3ம் இடத்தையும், 800மீ, 1500மீ ஓட்டத்தில் 2ம் இடத்தையும் பிடித்து தற்போது சர்வதேச அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகிய புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த லெட்சுமி கடந்த இரண்டு நாட்களாக சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச மூத்தவர்களுக்கான தடகள போட்டியில் பங்கேற்றார்.

திருச்சி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 11 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் 35வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 400மீ, 800மீ, 1500மீ, 4X400மீ ரிலே என்ற 4 போட்டிகளிலும் லெட்சுமி தங்க பதக்கம் பெற்றுள்ளார். இந்த 4 பிரிவுகளிலும் மொத்தம் 4 தங்க பதக்கங்களை பெற்று திருச்சி, புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் 55 வயதிற்கான பிரிவில் திருச்சியை சேர்ந்த விளையாட்டு வீரர் அண்ணாவி சர்வதேச அளவிலான குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்க பதக்கங்களும், வட்டு எறிதலில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.

அதேபோல் 60 வயது பிரிவில் பங்கேற்ற வீரர் அசோகன் சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும், 70 வயது பிரிவில் பங்கேற்ற வீரர் பக்தவச்சலம் குண்டு எறிதலில் வெள்ளி பதக்கமும், 55 வயது பிரிவில் பங்கேற்ற வீரர் பாஸ்கரன் 4 x 100 ரிலே வில் வெள்ளி பதக்கமும், 50 வயது பிரிவில் பாக்கியலட்சுமி நீளம் தாண்டுதலில் தங்கம், 5 வயது பிரிவில் பங்கேற்ற ஞான சுகந்தி சங்கிலி குண்டு எறிதலில் தங்கமும், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் நடந்த சர்வதேச அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் மொத்தம் 9 தங்கப்பதக்கங்களும், 5 வெள்ளி பதக்கங்களும் புதுகை, திருச்சியை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பெற்றுள்ளனர்.

Related posts

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்

தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்