இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 20ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொடக்க கல்வித்துறையில் 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான நேரடிப்பணி நியமன போட்டித் தேர்வு நடக்க இருப்பதை அடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்று தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது.

இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 9ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரையில் விண்ணப்பிக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டது. பணி நியமனத்துக்கான தேர்வு ஜூன் 23ம் தேதி நடக்க இருக்கிறது. அதன்படி நேற்று வரையில் 20 ஆயிரத்து 378 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர். அதனால், 20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

மேலும், விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்புவோர் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை திருத்தம் செய்யவும் இணைய தளத்தில் வழிவகை செய்துள்ளது. இது தவிர திருத்தங்கள் செய்யும் போது இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திவர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருத்தங்கள் செய்த பிறகு அதில் வேறு மாற்றங்கள் செய்யக்கூடாது. திருத்தங்கள் செய்யப்படாத விண்ணப்பங்கள் அனைத்திலும் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். செல்போன் எண், மின்னஞ்சல், ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.

இனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தங்கள் இருந்தால் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். திருத்தம் செய்யும் போது குறைவான கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால்,ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித் ெ தாகையை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனி வரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வுவாரியம் தெரிவித்துள்ளது.

 

Related posts

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது