இந்துப்பு இன்ட்ரஸ்ட்டிங் வரலாறு!

நாம் காலங்காலமாக அன்றாடச் சமையலில் கல்லுப்பு, அவற்றைப் பொடியாக்கி அயோடின் சேர்த்து விற்கப்படும் தூள்உப்பு போன்றவற்றைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.சமீபகாலமாக ராக் சால்ட், ஹிமாலயன் சால்ட் எனப்படும் இந்துப்பு மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த இந்துப்பு எப்படி பயன்பாட்டுக்கு வந்தது? எப்போது வந்தது? என்பதை விளக்க சில சுவாரஸ்ய தகவல்கள் இருக்கின்றன.

உப்பு வரலாறு

மனிதனுக்கு உப்பு என்ற ஒன்று தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் மனித பரிணமாத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். அதாவது மனிதன் தனக்கு சாப்பிடக் கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில், கடற்கரையில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் கடல் உப்பை அடிப்படையாகக் கொண்டே உருவாகி இருக்கின்றன. மலைப்பகுதிகளில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் இந்துப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்கியிருக்கிறது. எகிப்தியர்கள் சகாரா பாலைவனத்தில் இருந்து இந்துப்பை வெட்டி எடுத்து ஒட்டகத்தின் மேல் ஏற்றி வந்து சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் விற்பனை செய்து செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்.

இதுவே அதற்கு முக்கிய காரணம். இந்தியாவில் கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியரின் அமைச்சரவையில் இருந்த கெளடியல்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் இந்தியாவில் கிடைக்கும் பல வகை உப்புகளை பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் இந்துப்பும் ஒன்றாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் ”சைந்தவா” என்று அழைக்கப்படும் இந்துப்பை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்ததாக சான்றுகள் இருக்கின்றன.கடலோரப் பகுதிகளான தென்னிந்தியாவில் கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கல்லுப்பு கிடைக்காத மலையடிவாரப் பகுதிகளில் வாழும் வட நாட்டினர், மலைப்பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பாறை போலவும், படிகங்களாகவும் பூமியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் படிந்திருந்த இந்துப்பை வெட்டி எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு மலைத்தொடரில் இருந்து பெரும்பாலும் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.

இதனை எடுக்க, சுரங்கம் தோண்டி கரிச்சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பது போல் உப்பை வெட்டி எடுத்து மேலே கொண்டு வருவார்கள். பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்பு சுத்தமான நீரிலும், இளநீரிலும் ஊற வைத்து பதப்படுத்தி அதன்பிறகே விற்பனைக்கு வருகிறது.ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்துப்பில் கடல் உப்பில் இருக்கும் இயற்கை தாதுக்கள் போலவே, இயற்கையான அயோடின் சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துகள் இருக்கின்றன. மேலும், 80 விதமான தாதுக்களையும் கொண்டுள்ளதால், இந்துப்பு தனித்துவம் பெற்றுள்ளதாக இருக்கிறது.

 

Related posts

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்