திருச்சி – திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 12 ஆண்டுகளை நிறைவு செய்தது: தென்மாவட்ட பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு


நெல்லை: திருச்சி – திருவனந்தபுரம் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நேற்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்தது. தென்மாவட்ட பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. நெல்லையில் இருந்து மட்டுமே அந்த ரயிலில் தினமும் சராசரியாக 161 பேர் பயணிக்கின்றனர் என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தென்மாவட்ட நகரங்களை இணைக்கும் வகையில் இன்டர்சிட்டி ரயில்கள் இல்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி நெல்லை- திருச்சி இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இந்த ரயில் பகல் நேர ரயிலாக இயக்கப்பட்டதால், ஆரம்பத்தில் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்டது. பின்னர் மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்வோர் அதிகளவு இந்த ரயிலை பயன்படுத்த தொடங்கினர்.

இந்த ரயிலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 2017ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி நெல்லையில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வரை இந்த ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டது. ரயில் நீட்டிப்பு காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து கேரளா மற்றும் நாகர்கோவில் செல்லும் பயணிகளும் அதிகளவு பயன் அடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை மார்க்கமாக பகல் நேரத்தில் காலை 7.30 மணிக்கு பிறகு, மாலை 5.30 மணிக்கே ரயில் வசதிகள் உண்டு என்ற பெருங்குறையை தீர்த்த பெருமையும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசிற்கே உண்டு. இந்த ரயில் வந்த பின்னரே நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் செல்வோரும், மதுரை மார்க்கத்தில் செல்வோரும் பகல் வேளைகளில் ரயிலில் பயணிக்க முடிந்தது. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டு நேற்றோடு 12 ஆண்டுகள் நிறைவுற்றது.

அந்த ரயில் திருவனந்தபுரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த ரயிலை அதிகளவு தென்மாவட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல் தற்போது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. நடப்பு 2024ம் ஆண்டில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் நெல்லையில் இருந்து தினமும் சராசரியாக இரண்டாம் வகுப்பு சிட்டிங்கில் 140 பேரும், ஏசி சிட்டிங்கில் 21 பேரும் பயணித்து வருகின்றனர். வள்ளியூரில் இருந்து இரண்டாம் வகுப்பு சிட்டிங்கில் 15 பேரும், நாகர்கோவிலில் இருந்து 74 பேரும், குழித்துறையில் இருந்து 33 பேரும் பயணித்து வருகின்றனர். ஏசி சிட்டிங்கை ெபாறுத்தவரை நாகர்கோவிலில் இருந்து 13 பேரும், குழித்துறையில் இருந்து 4 பேரும் பயணிப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2023-24ம் ஆண்டை பொறுத்தவரை நெல்ைல ரயில் நிலையத்தில் இருந்து சராசரியாக இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு சிட்டிங்கில் 124 பேரும், ஏசி சிட்டிங்கில் 21 பேரும் பயணித்துள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு இந்த ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. மேலும் இந்த ரயிலில் முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் பயணிக்கும் ரயில்களில் தெற்கு ரயில்வேக்கு வருமானத்தை அள்ளித்தரும் ரயில்களில் ஒன்றாக திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு