தெற்கில் தீவிரமடையும் போர் காசாவில் நிவாரண உதவிகளும் நிறுத்தம்: மக்கள் கடும் தவிப்பு

டெய்ர் அல் பலாஹ்: தெற்கு காசாவில் போர் தீவிரமடையும் நிலையில், நிவாரண உதவி விநியோகமும் முற்றிலும் நின்று போனதால் மக்கள் தவிக்கின்றனர். காசாவில் ஒருவார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு கடந்த 1ம் தேதி முதல் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் மையப்பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் நேற்று முன்தினம் நுழைந்து ஹமாசுடன் சண்டையிட்டு வருகின்றன. வடக்கு காசாவிலும் தொடர்ந்து தீவிர சண்டை நடக்கின்றன. இதனால் வடக்கு காசாவை இஸ்ரேல் சர்வ நாசமாக்கியது போல் தெற்கு காசாவையும் முற்றிலும் அழிக்க திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேல் உத்தரவால், வடக்கு காசாவில் இருந்து 1.80 லட்சம் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது தெற்கிலும் போர் தீவிரமடைந்துள்ளதால் எங்குமே பாதுகாப்பான இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. கடந்த 1ம் தேதி முதல் தினந்தோறும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக நிவாரண உதவி பொருட்களின் விநியோகமும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது. எல்லை நகரமான ரபாவில் மட்டுமே கோதுமை, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவி பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த பேட்கள் கூட இல்லாமல் பெண்கள், கர்ப்பிணிகள் இரட்டிப்பு சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதுவரை இப்போரில் காசாவில் 16,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 42,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள்