தேவைப்படும் இடங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி தரப்படும்: அமைச்சர் பேச்சு

பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா (திமுக) பேசுகையில், “ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில், ஒட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய நீதிமன்றக் கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “பல்வேறு நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களிலே இயங்கி வருகின்றன.

அங்கே இப்போது இடங்கள் கொடுத்தாலும்கூட, அங்கே புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்று சொன்னால், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் என்று சொல்லி,ரூ.13 கோடியிலே இப்போது புதிதாக கட்டிடங்களும், அங்கே இருக்கக்கூடிய நீதித் துறை நடுவர்களுடைய குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. எனவே, நிதிநிலைமைக்கேற்றவாறு, ஒன்றிய அரசாங்கத்தினுடைய நிதியின் அடிப்படையிலே தான் ஆண்டுதோறும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

அந்தவகையில் முன்னுரிமையிலே இருக்கக்கூடிய கட்டிடங்களுக்கு முதல் வரிசையில் இடம் கொடுத்து அதைத் தொடர்ந்து எங்கெங்கெல்லாம் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் கட்டிக் கொடுக்கப்படும். எனவே, உறுப்பினர், இப்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்ற நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கேட்டு ஏற்கெனவே கொடுத்திருக்கிறார். அது இன்றைக்கு உயர்நீதிமன்றத்தின் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன்பிறகு நிதித் துறையினுடைய ஒப்புதல் பெற்று, அதன்பிறகு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய அறிவிப்பு தேவைப்படின் தரப்படும்” என்றார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்