மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் சாலை,குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சாலைப்பணிகள், குடிநீர் பணிகள் மற்றும் பாதள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள நகர் நிர்வாக அலுவலகத்தில் அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள்,நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்களுடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தகூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புர உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார், தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர் ஹனீஸ் சாப்ரா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவுற்றவுடன் சாலை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க பெற்று போக்குவரத்துக்கு இடையூறின்றி இருக்கும் நிலையினை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும். அதேபோல், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு மழைநீரினை சேகரிப்பதற்காக தயார் நிலையில் வைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும், வடகிழக்கு பருவமழையின்போது கனமழை மற்றும் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஜெசிபி வாகனங்கள் போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைகாலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு முகாம்களை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழையின்போது அனைத்து பணியாளர்களைக் கொண்ட குழுக்கள் அமைத்து பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், நகர்ப்புர உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம், குடிநீர் விநியோகம், துப்புரவு பணி மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க வேண்டும். பொது சமுதாய கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தனியார் மூலம் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து கட்டடங்களையும் உரிய முறையில் பராமரித்திட வேண்டும். மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் மீதான நடவடிக்கைகளை அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி நிருவாக மண்டல இயக்குநர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள் தனி கவனம் செலுத்தி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை