தினமும் சம்மன் அனுப்பவதற்கு பதிலாக நீதிமன்ற உத்தரவு வரை ‘ஈடி’ காத்திருக்க வேண்டும்: 7வது சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் 7வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிந்தது. கடந்த ஓர் ஆண்டாக ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இதுவரை 7 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. மேலும் சம்மன் சட்ட விரோதமானது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வோடு அனுப்பப்படும் சம்மன்கள் என்று கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இன்று ஆஜராக வேண்டிய நிலையில், இம்முறையும் அவர் ஆஜராக மாட்டார் என்று ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை மார்ச் 16ம் தேதி வரவுள்ளதால், தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், நாங்கள் கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது’ எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை