பிஎம் கிசான் திட்டத்தில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி தவணை நிதி: வாரணாசி விழாவில் பிரதமர் மோடி விடுவித்தார்

வாரணாசி: விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விடுவித்தார். உத்தரபிரதேச மாநிலம் வாராணசி மக்களவை தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்ற பிரதமா் மோடி நேற்று முதல்முறையாக வாராணசிக்கு சென்றார். அவரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில், பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை மோடி விடுவித்தார். இதன்மூலம், 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் பயிற்சி பெற்ற 30,000க்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களுக்கு இணை விரிவாக்கப் பணியாளராகப் பணியாற்றுவதற்கான சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

காசி விஸ்வநாதரின் ஆசியாலும், கங்கை தாயின் ஆசியாலும், காசி மக்களின் அன்பாலும் நான் மூன்றாவது முறையாக நாட்டின் தலைமை சேவகனாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன். ஜனநாயக நாடுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் அரிது. ஆனால் இந்திய மக்கள் இதைச் செய்துள்ளனர். வாரணாசி மக்கள் என்னை மூன்றாவது முறையாக எம்.பி.யாக மட்டுமல்ல, பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர். உங்களின் இந்த நம்பிக்கைதான் எனது மிகப்பெரிய சொத்து.

உங்களின் இந்த நம்பிக்கை உங்கள் சேவைக்காக கடுமையாக உழைக்கவும், நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் என்னை ஊக்குவிக்கிறது. இரவும் பகலும் கடுமையாக உழைப்பேன். உங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற நான் எல்லா முயற்சிகளையும் செய்வேன். வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண்களாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளை நான் கருதுகிறேன். அவர்களின் அதிகாரத்துடன் எனது மூன்றாவது பதவிக் காலத்தை ஆரம்பித்துள்ளேன்.இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்