இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி போதைப்பொருள் விற்பனை: ஆயுர்வேத தெரபிஸ்ட் கைது

திருவனந்தபுரம்: இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களிடம் போதைப் பொருளை விற்பனை செய்த ஆயுர்வேத தெரபிஸ்ட் கைது செய்யப்பட்டார்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போதைபொருள் விற்பனை நடந்து வருவதால் கேரள கலால்துறையினர் இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் சாட்டிங் செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரைப் பிடிக்க கோட்டயம் கலால் துறையினர் திட்டமிட்டனர். இன்ஸ்டாகிராம் மூலம் அந்த நபரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்த கலால் துறையினர், அந்த எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அந்த நபர் பெங்களூருவிலிருந்து கோட்டயத்திற்கு போதைப் பொருளுடன் வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் வரும்வழியில் தயாராக காத்திருந்த கலால் துறையினர் கோட்டயத்தில் வைத்து அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கோட்டயம் பெருவந்தானம் பகுதியைச் சேர்ந்த பிலிப் மைக்கேல் (24) என தெரியவந்தது. அவரிடமிருந்து 3 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பெங்களூருவிலிருந்து வரும் வழியில் அவர் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி உள்பட பல்வேறு பகுதிகளில் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளார்.

பெங்களூருவில் ஆயுர்வேத தெரபிஸ்டாக பணிபுரிந்து வரும் பிலிப் மைக்கேல் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களிடம் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இவர் பெருமளவு போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். விசாரணைக்குப் பின் கலால் துறையினர் அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிலிப் மைக்கேலுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருந்த இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி