பூச்சி உணவு

பூச்சிகளில் அதிக புரதச்சத்து இருக்கின்ற காரணத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் அவற்றை உணவாக சாப்பிடுகின்றனர். மழைக்காலங்களில் வீட்டில் இருக்கும் விளக்கு ஒளிக்கு படையெடுத்து வரும் ஈசல்களை பிடித்து அரிசியுடன் வறுத்து உண்பது கிராமப்புற மக்களின் வழக்கமாக இருந்தது. இந்த ஈசல்களை வறுத்து மிக்சரில் சேர்க்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதே போல் சிவப்பு எறும்புகள், இலிப்பூச்சி போன்றவற்றையும் மக்கள் சாப்பிடுகிறார்கள். இதில் புரதம் மற்றும் நுண்ணூட்ட சத்துகள் அதிகம் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

கொரோனா காலத்தில் சிவப்பு எறுப்பு சட்னி உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு ஒன்றிய அரசு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இந்த சிவப்பு எறும்புகள் மாம்பழம், நாவல்பழ மரம் முதலிய மரங்களில் அதிமாக வாழ்கின்றன. இவற்றை பிடித்து அம்மாநில பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னி தயாரிக்கிறார்கள். இதே போல் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களிலும் சிவப்பு எறும்பு சட்னியை உணவாக சாப்பிடுகிறார்கள்.

சிவப்பு எறும்புகளை முட்டைகளுடன் எடுத்து உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்ற பொருட்களை சேர்த்து சட்னி தயாரிக்கப்படுகிறது. சாதத்துடன் கலந்து இதை பழங்குடியினர் சாப்பிடுகின்றனர். இதனால் சளி, இருமல், மூட்டு வலி, பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த சட்னிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் மதிப்பு கூடியுள்ளது. சந்தையில் கிலோ ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு எறும்புகள் ரூ.1000மாக உயர்ந்துவிட்டது.

எறும்பு முட்டைகள் தாய்லாந்தில் கேன்களில் விற்கப்படுகின்றன. மேலும் அவை பருவகால மூலப்பொருளாக கருதப்படுகின்றன. கை மோட் டேங் என்று அழைக்கப்படும் இந்த முட்டைகள் சிவப்பு எறும்புகளின் கூடுகளிலிருந்து பெறப்பட்டு, கவனமாக சுத்தம் செய்யப்பட்டு பல்வேறு உணவுகளில் சமைக்கப்படுகின்றன. எறும்பு முட்டைகள் பொதுவாக உள்ளூர் மூலிகைகள் மற்றும் காய்கறிகளுடன் கிளறி வறுக்கப்படுகின்றன. அவை சாலட் வடிவத்திலும் புதியதாக உண்ணப்படுகின்றன. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோவிலும் வறுத்த எறும்புகளை சிற்றுண்டியாக சாப்பிடுகின்றனர்.

சிவப்பு எறும்பு சட்னி சுவை மட்டுமே உங்களுக்கு தெரிகிறது. ஆனால் இந்த வகை எறும்புகளை சேகரிப்பவர்கள் அதனிடம் வாங்கும் வலியான ‘கடி’ குறித்து தெரியாது. அப்படி கஷ்டப்பட்டு தான் இந்த வகை எறும்புகளை பிடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு எறும்புகள் சூப் மற்றும் சூரணம் போல் வைத்தும் சாப்பிடுகிறார்கள். குளிர் பிரதேசத்தில் வாழும் ராணுவ வீரர்கள் நூண்ணூட்டச் சத்துகள் பெறுவதற்கு உணவுபட்டியலில் இவ்வகை உணவை சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

சங்ககால மக்கள் பெரிய விலங்குகளை வேட்டையாடுவதை விட சின்ன பூச்சிகளையே உண்டு வாழ்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். உணவே மருந்து என்ற பழமொழியின் அடிப்படையில் மனிதன் தான் வாழும் பகுதியில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி தனக்குரிய உணவு பழக்கத்தையும் அமைத்துகொண்டான். அப்படி உருவான நாகரீகம் தான் இந்த பூச்சி உணவு, சிவப்பு எறும்பு சட்னி பழக்கமாக மாறியுள்ளது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா