விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக.. மக்களவை தேர்தல் பாரபட்சமின்றி நடத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!!

டெல்லி: தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது; தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்துக்கு அவசியமானதாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடுவதற்கு சமநிலையில் வாய்ப்பு இருக்க வேண்டும். விசாரணை அமைப்புகளை ஒரு கட்சி கட்டுப்படுத்தக்கூடாது. தேர்தலில் அனைவரும் சம பலத்துடன் களமிறங்க நிதி அவசியம்.

தேர்தல் பத்திர முறைகேட்டால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது.
விளம்பரங்களில்கூட பாஜக மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஒட்டுமொத்த தேர்தல் பத்திரங்களில் 56% பாஜகவே பெற்றுள்ளது; காங்கிரசுக்கு வெறும் 11% நன்கொடை மட்டுமே கிடைத்துள்ளது. அனைத்து வாய்ப்புகளும் ஆளுங்கட்சியின் கைவசம் மட்டுமே இருக்கக்கூடாது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் வங்கி கணக்குகள் உள்நோக்கத்துடன் முடக்கப்பட்டுள்ளதாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?