மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைப்பு: ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் ஆகியோர் விசாரணையை தொடங்கினர்

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைத்து கலாஷேத்ரா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு ‘சிறப்பு பயிற்சி’ என்ற பெயரில் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் மீது பரபரப்பு புகார் அளித்தனர்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு கல்லூரியில் படித்த கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் தன்னிடம் அடிக்கடி போன்செய்து ஆபாசமாக பேசியதாகவும், தன்னை வீட்டிற்கு அழைத்ததாகவும் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். புகாருடன் மாணவி தனக்கு பேராசிரியர் ஹரிபத்மன் ஆபாசமாக பேசி அழைக்கும் ஆடியோவும் இணைத்து இருந்தார். அந்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்திய போது, மாணவி கூறிய அனைத்து குற்றச்சாட்டும் உண்மை என தெரியவந்தது. புகார் அளித்த மாணவி தன்னுடன் கல்லூரியில் பயின்ற சக மாணவிகள் 5 பேர் பேராசிரியரின் தொடர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி சீரழிக்கப்பட்டார்கள். அவர்களும் பேராசிரியருக்கு எதிராக புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மாணவியின் புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று பேராசிரியரால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகளிடம் ரகசியமாக அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, பேராசிரியர் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆபாச படங்கள், வீடியோ மற்றும் பேராசிரியர் மாணவிகளின் உடல் அங்கங்களை ரசித்து பேசிய ஆடியோவும் ஆதாரமாக தனிப்படையினரிடம் அளித்துள்ளனர். மாணவிகள் அளித்த ஆடியோவில் உள்ள குரல் பேராசிரியர் ஹரிபத்மன் உடையது தானா என்று நேற்று ஆய்வு செய்யப்பட்டது. அதில், மாணவிகள் அளித்த ஆபாசமாக பேசிய ஆடியோவில் உள்ள குரல் பேராசிரியர் ஹரி பத்மன் குரலுடன் ஒன்றாக இருந்தது. இதனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் அளித்துள்ள புகார் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் உள்ள மாணவிகளை அடிக்கடி கச்சேரி என்ற பெயரில் அழைத்து தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் விசாரணையில் உறுதியாகி உள்ளது. அதேநேரம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இ-மெயில் வாயிலாக நேற்று இரவு வரை வெளிநாடுகளில் இருந்து 5 புகார்கள் என 15க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து இருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாட்டில் உள்ள மாணவிகளின் புகார்கள் மீது மகளிர் ஆணையம் சார்பில் இ-மெயில் மூலம் கேள்விகள் அனுப்பப்பட்டு அதற்கான பதில் மற்றும் ஆதாரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே பேராசிரியர் ஹரி பத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் மீது தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் பலர் பெயர் குறிப்பிடாத இ-மெயில் மூலம் புகார் அளித்து வருகின்றனர். எனவே, மாணவிகளின் பாலியல் தொடர்பாக பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட 4 பேர் மீது புகார்கள் குவிந்து வருவதாலும், அதேநேரம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் எடுத்த கடுமையான நடவடிக்கையின் படி கலாஷேத்ரா அறக்கட்டளை மாணவிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். முன்னதாக பேராசிரியர்கள் மீது சில மாணவிகள் வேண்டும் என்றே புகார் அளிப்பதாகவும், பேராசிரியர் உட்பட 4 பேரும் நல்லவர்கள் என்று சான்று அளித்து அவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் மாநில மகளிர் ஆணையம் எடுத்த கடுமையான நடவடிக்கையால் வேறு வழியின்றி நேற்று அவசரமாக கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அறக்கட்டளை இயக்குநர் ரேவதி தலைமையில் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை கைமீறி சென்றதால் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் ஹரிபத்மன் நடன கலைஞர்களான சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் அதிரடியாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதோடு இல்லாமல், முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் கடந்த 2008ம் ஆண்டு முதலே, இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு நடந்து வருவதாக ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். எனவே, மாணவிகளின் பாலியல் புகார்களை விசாரணை நடத்த கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி லத்திகா சரண், டாக்டர் சோபா வர்தமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணை குழு தனது விசாரணையை இன்று தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த விசாரணை குழு பேராசிரியர் ஹரிபத்மன் மீது புகார் அளித்த மாணவிகளிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதன் பிறகு முன்னாள் மாணவிகள், வெளிநாட்டில் உள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாக கல்லூரி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் பாலியல் புகாரால், அதில் தொடர்புடைய முன்னாள் பேராசிரியர்கள் பலர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சிலர் கலக்கமடைந்துள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி