உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு பிரத்யேக மருந்தகம் துவக்கம்: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிய முறை அறிமுகம்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகள் பிரிவில் தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர். பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என்று தனித்தனி மருந்தகங்கள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளின் வசதிக்காக ஒரே இடத்தில் மாத்திரைகள் வழங்கும் வகையில், பிரத்யேக மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை டீன் தேரணிராஜன் முன்னிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பெண் ஒருவர், அந்த மருந்தகத்தை திறந்து வைத்தார். மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறுகையில், ‘‘இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் தேவையான மருந்துகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் ‘வீடு திரும்பும் உள்நோயாளிகள் மருந்தகம்’ திறக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து சிகிச்சை பிரிவில் இருந்தும் வீடு திரும்புவோர் நண்பகல் 12 முதல் 6 மணிவரை மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம். இங்கு, 15 நாளுக்கான மருந்துகள் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக இங்குதான் பிரத்யேக மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!