சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

திருப்போரூர்: சென்னை விஐடி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சட்டம், பொருளாதாரம், கணினி அறிவியல், மேலாண்மை, வணிகம் போன்ற இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு மாத புத்தாக்க பயிற்சி திட்டத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில், விஐடி வேந்தர் கோ.விஸ்வநாதன் பேசியதாவது: கல்விக்காக அதிகம் செலவு செய்ய முன்வந்துள்ள பெற்றோரை நான் மிகவும் மதிக்கிறேன். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், தற்போது 3 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது.

இந்த தொகையை ஒன்றிய அரசு அதிகரிக்க வேண்டும். கல்வியால் மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்ற முடியும். தற்போது நிலவுகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வது கடினமான செயல். ஆனால், நாம் நன்கு படித்து பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முடியும். அதற்காகவாவது மாணவர்கள் 3 முதல் 5 வருடங்கள் கடுமையாக உழைத்து படித்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் இறையன்பு பேசுகையில், “மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய ஒவ்வொரு நிமிடமும் கடுமையாக உழைக்க வேண்டும். அறிவை வளர்த்துகொண்டால் வேலைவாய்ப்புகள் மாணவர்களை தேடி வரும். மாணவர்கள் அதிக புத்தகங்களை படிப்பதுடன் ஒழுக்கமுடன் தற்சார்புடையவர்களாக வாழவேண்டும்.

பணம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை இழந்தால் கூட திரும்ப பெறலாம். ஆனால், நேரத்தை வீணடித்து விட்டால் அதை திரும்பபெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.“ என்றார். கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் பிராண்ட் மேலாண்மை பிரிவின் உதவி துணை தலைவரும் விஐடி முன்னாள் மாணவருமான ரமேஷ் பரத், மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்து பேசினார். விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன் பேசுகையில், மாணவர்கள் தெளிவான இலக்குடன் கடுமையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். முக்கியமாக வாழ்வில் நேர்மையும், நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார். விழாவில், முன்னதாக வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாக ராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், கல்வித்துறையின் முதல்வர் நயீமுல்லாகான், மாணவர் நலன் இயக்குநர் ராஜசேகரன் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விஐடி சென்னையில் சட்டம், வணிகம் கணினி அறிவியல் போன்ற பொறியியல் அல்லாத இளங்கலைப் படிப்புகளில் மொத்தம் 1400க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது. முன்னதாக, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்காக நடந்த புத்தாக்க பயிற்சி நிகழ்வில் தமிழக தலைமை தகவல் ஆணையர் ஷகீல் அக்தர், ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் சிட்டிபாபு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். ஜூலை 22ம்தேதி முதல் ஜூலை 26ம்தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஜக-விற்கு ஒரு இடம் கூட தமிழகம் வழங்காததால் தான் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டுகிறதா?: ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் துரை வைகோ கேள்வி

சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் ஃபாஸ்டேக் முறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் இன்று முதல் அமல்

காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் புதிய கட்டிடங்களை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!