புதிய ஆய்வில் தகவல் தலை, கழுத்து கேன்சர் இந்தியாவில் அதிகரிப்பு: 80% குணப்படுத்த முடியும்

புதுடெல்லி: இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், இத்தகைய புற்றுநோய் தாக்கிய 80 சதவீதம் பேரை குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு, கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரை அறக்கட்டளையின் ஹெல்ப்லைன் தொலைபேசி மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகள் மூலம் நடத்தப்பட்டவை.

இதில் 1,869 புற்றுநோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வை தலைமை ஏற்று நடத்திய மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது: இந்தியாவில் அதிக புகையிலை பழக்கம் மற்றும் பாலியல் ரீதியான மனித பாப்லோமா வைரஸ் (எச்பிவி) தொற்று காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடம் இது அதிகரித்து வருகிறது.

மற்ற புற்றுநோய் போல் அல்லாமல் வாழ்க்கை முறை மாற்றத்தாலேயே பெரும்பாலான தலை மற்றும் கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும். முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர். முறையான பரிசோதனை இல்லாததால்தான் இந்தியாவில் மூன்றில் 2 பங்கு பேருக்கு புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுகிறது. எனவே புகையிலை பழக்கத்தை கைவிடவும், நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆரம்ப பரிசோதனைகள் அவசியம் என்கிற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்