தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்

*அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனவே இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம், என அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார். கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் தற்போது கொரோனா நோய் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா நோயால் உயிருக்கு எந்தவித ஆபத்து இல்லை என்றாலும், கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 11 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக அளவில் சளி தொந்தரவுடன் யாரேனும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து அவர்களுக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனைகள் செய்யவும், மருத்துவமனையில் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப பரிசோதனைகள் எண்ணிக்கையையும், படுக்கைகளில் எண்ணிக்கையையும் அதிகரிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 61 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் முழுவதும் 19 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் 13 பேர், அங்குள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற மருத்துவமனைகளில் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனவே இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். இருப்பினும் யாரேனும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு மருத்துவமனையில் 11 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருப்பதால் மக்கள் அதிகாலை நேரங்களில் பனி பெய்யும் போது, வெளியே வருவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதையும் மீறி காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் குடிநீரை காய்ச்சி, வடிகட்டி குடிப்பது மிகவும் நல்லது. அதேபோல வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை அதிக அளவில் உண்ண வேண்டும். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி ஏற்பட்டால் வெந்நீரில் உப்பு போட்டு கொப்பளிக்க வேண்டும். இதை பின்பற்றினாலே காய்ச்சல், சளி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம், என்றார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு