தொழிற் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை சமர்பிக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தொழிற்திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன்னர், அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரிய மனுவுக்கு ஒன்றிய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜி.சுந்தர்ராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்:
இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சித் திட்டங்களை தொடங்க, சுற்றுச்சூழல் சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்ய வலியுறுத்தவில்லை எனவும், ஒரு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்வதைக் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, புதிய தொழில் திட்டங்களுக்கு காலநிலை மாற்ற தாக்க ஆய்வையும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

நிபா வைரஸ் தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

பனாமா-கோஸ்டா ரிகா இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி