தனிமனிதருக்கு தம்பட்டம்

நா ட்டு மக்கள் எதிர்பார்த்தது போலவே பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் துதிபாடிகளின் கான கோஷத்தோடு முடிந்திருக்கிறது. தேசிய கொள்கைகள் குறித்தும், வளர்ச்சி திட்டங்களில் மாநிலங்கள் தங்களை வலுவாக இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமிக்க ஒரு கூட்டத்தில், பிரதான மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது ஒன்றிய அரசின் ஒருதலைபட்ச முடிவுகளை காட்டுகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் 26 முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பிரதான 10 மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்து விட்டனர். பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் காணப்பட்ட பாரபட்சமே இதற்கு காரணமாகும். நடப்பு பட்ஜெட்டில் பாஜ ஆளும் மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கு முட்டு கொடுக்கிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் கோடி, கோடியாய் நிதியை கொட்டி கொடுத்துவிட்டு, தமிழகம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களை கைவிட்டு விட்டனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தங்களுக்கு வாக்களிக்காத மக்களை பழிவாங்கும் விதமாக பட்ஜெட்டை ஒன்றிய அரசு அமைத்தது கண்கூடாக தெரிகிறது. தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்களை அறிவிக்காததோடு, ஏற்கனவே நடந்து வரும் திட்டங்களுக்கும் நிதிகுறைப்பு என்கிற வஞ்சக செயலில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டியுள்ளது. சென்னையில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதியாக ஒரு பைசா கூட தர முன்வரவில்லை. இந்நிலையில் நிதிஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணியை சேர்ந்த மாநில முதல்வர்கள் புறக்கணித்தது முற்றிலும் நியாயமே.

அதில் கலந்து கொண்ட ஒரே எதிர்கட்சி முதல்வரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் 5 நிமிடங்கள் கூட பேச விடாமல், மைக்கை அணைத்து அவமானப்படுத்தியுள்ளனர். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே கிராமப்புற வேலை உறுதி திட்டம், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களையும் பாஜவும், அதன் கூட்டணி கட்சிகளுமே ஆளவேண்டும் என்றால், அது ஜனநாயகத்திற்கு விடப்படும் சவாலாகவே கொள்ள வேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதையே அரசியலமைப்பு விவரிக்கிறது. நிதி ஆயோக் கூட்டங்கள் அதன் வளர்ச்சியை பற்றி சிந்திக்க கூடியதாகும். இதில் மாநில முதல்வர்கள் பங்கேற்காத அளவிற்கு அவர்களை பாடாய்படுத்துவதும், பங்கேற்கிற முதல்வர்களையும் பேச விடாமல் தடுப்பதும் பாஜவின் பாசிச முகத்தையே வெளிக்காட்டுகிறது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரிகளை மட்டும் கோடிக்கணக்கில் பெற்றுக் கொண்டு, நிதியை பகிர்ந்து அளிப்பதில் மட்டும் ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவது ஏற்புடையது அல்ல.

இதையெல்லாம் விட கடந்த 10 ஆண்டுகளாக நிதி ஆயோக் என்பது தனிமனிதருக்கு தம்பட்டம் அடிக்கும் குழுவாகவே மாறி வருகிறது. பிரதமர் அலுவலகத்தின் ஒரு அங்கமாக செயல்படும் நிதி ஆயோக், சுதந்திரமான தொழில்முறை அமைப்பாக இல்லை. பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பஜனை பாடி செல்லும் கூட்டமாக நிதி ஆயோக் திகழ்கிறது. இது ஒருபுறமிருக்க, நிதி ஆயோக்கிற்கு நிதி ஒதுக்கும் அதிகாரங்கள் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே. எல்லா அதிகாரங்களையும் எப்போதோ எடுத்து கொண்டுவிட்ட ஏகாதிபத்திய தலைமை, நிதி ஆயோக் கூட்டங்களை கூட உப்புக்கு சப்பாணியாக கூட்டவே முயல்கிறது. இதற்கு பழைய முறைப்படி திட்ட கமிஷனே தேவலை எனலாம்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்