25 லட்சம் ஏக்கர் கடல் பகுதியை இந்தியாவுடன் இணைத்தவர் இந்திராகாந்தி: காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டாக்டர் செந்தில் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்ததாக பிரதமர் மோடி கூறியிருப்பது, அபாண்டமான பொய். கச்சத்தீவானது, ராமேஸ்வரத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணல் திட்டு.
1976ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி, கடல் வரையறை ஒப்பந்தத்தை இலங்கை அரசுடன் மேற்கொண்டார்.

அந்த ஒப்பந்தத்தில் 285 ஏக்கர் மணல் திட்டு இலங்கைக்கு என முடிவானபோது, மன்னார்வளைகுடா என்னும் கடல் பரப்பை இந்தியாவுக்கு சொந்தமாக்கினார். அதாவது, கன்னியாகுமரி, குளச்சல் பகுதியில் உள்ள 25 லட்சம் ஏக்கர் கடல் பரப்பை இந்தியாவுக்கு சொந்தமாக்கி, மிகப்பெரிய ராஜதந்திரத்தை பிரதமர் இந்திராகாந்தி கையாண்டு கைப்பற்றினார்.

அருணாச்சலபிரதேசத்தில் 5 லட்சம் ஏக்கர் பரப்பை சீனா அபகரித்து இருக்கிறது. இந்த விஷயம் வெளியே வந்துவிடும் என்பதற்காக, திசை திருப்பும் வகையில் கச்சத்தீவு விவகாரத்தை பேசி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் நாடகத்தை பாஜ அரங்கேற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி ஒரு சேல்ஸ்மேன்
சேலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் டாக்டர் செந்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டிற்கு மோடி வந்து, கியாரண்டி, வாரண்டி எல்லாம் கொடுக்காரு. காரணம், அவர் ஒரு சேல்ஸ்மேன். அதான், எப்படி விளம்பரம் செய்யனும்னு ஒரு கம்பெனி கிட்ட கோடி கோடியாய் கொட்டி கொடுத்துட்டு, அவங்க சொல்றபடி கோட், சூட் அணிந்து வந்து கியாரண்டி, வாரண்டி எல்லாம் கொடுக்கிறார் சேல்ஸ்மேன் மாதிரி. விற்காத பொருளுக்கு தான் விளம்பரம் அதிகமாக இருக்கும். அதுபோலதான், தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாத பாஜ’ என்றார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்