இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து சென்னை – திருச்சி இடையே நேற்றும், இன்றும் விமான சேவைகள் ரத்து: பிசிஏஎஸ், டிஜிசிஏ நடவடிக்கை

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடிஆர் ரக பயணிகள் விமானம், அது நிற்க வேண்டிய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது விமானத்தில் சரக்குகளை கையாளும் ஒரு வாகனம் வந்து, விமானத்தின் மீது லேசாக உராய்ந்து, சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் லேசாக சேதம் அடைந்தது. இந்நிலையில் அந்த விமானத்தை, பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இந்த விமானம் மீண்டும் உடனடியாக பறப்பதற்கு தகுதியற்றது என்று கூறி, விமானத்தை இயக்க அனுமதி மறுத்துவிட்டனர்.

மேலும் இதுகுறித்து டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன்க்கும் (டிஜிசிஏ) தகவல் அளித்தனர். இதையடுத்து, டிஜிசிஏ இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, குறிப்பிட்ட அந்த விமானம், மறு உத்தரவு வரும் வரை பறப்பதற்கு தடையும் விதித்தது. இதற்கிடையே இந்த விமானம் திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த அந்த ஏடிஆர் ரக விமானம் என தெரியவந்தது. இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம், தினமும் திருச்சி செல்லும் 4 விமானங்களையும், திருச்சியில் இருந்து சென்னை வரும் 4 விமானங்களையும் நேற்று ரத்து செய்தது.

அதைப்போல் இன்றும் (செவ்வாய்க்கிழமை) இந்த 8 விமானங்களும் ரத்து என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் விபத்துக்குள்ளான இந்த ஒரே ஏடிஆர் ரக விமானமே, சென்னை- திருச்சி – சென்னை இடையே தினமும் இயங்கி வந்ததால், வேறு வழியின்றி நேற்றும், இன்றும் இந்த 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விமானம் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் வானில் பறப்பதற்கு, பிசிஏஎஸ் மற்றும் டிஜிசிஏ அனுமதி பெற்ற பின்பு தான் விமானம் மீண்டும் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related posts

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

வள்ளலார் மையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

ஜோலார்பேட்டை அருகே கி.பி 15ம் நூற்றாண்டை சேர்ந்த போர்வீரன் நடுகல் கண்டெடுப்பு