அலட்சியம் வேண்டாம்

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இந்த கொடிய வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்து, புதுப்புது சிக்கல்களை உருவாக்கி வருகிறது. தற்போது மீண்டும் இந்த வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

ஒமிக்ரான் BA.2.86 வைரசில் இருந்து திரிபு ஏற்பட்டு ‘ஜே.என் 1’ என்னும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், சீனா, சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்த அளவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம், கவலை தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த 28 நாட்களில் 8.5 லட்சம் பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ‘ஜே.என் 1’ கொரோனா வைரஸ்தான். ஆனால், நல்வவாய்ப்பாக உயிரிழப்பு 8 சதவீதம் குறைந்துள்ளது. ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா என உலகின் 70-75 சதவீத மக்கள்தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் தற்போது குளிர்காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக அளவில் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை கட்டாயம் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்த அளவில், 225 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 797 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 4,50,10,986 ஆக உயர்ந்துள்ளது. இதில், 98.81 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், உயிரிழப்பை பொறுத்த அளவில், கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிராவில் ஒருவர், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தலா ஒருவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். ‘ஜே.என் 1’ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வகை கொரோனா வீரியம் குறைந்தது, மக்கள் அச்சப்பட தேவையில்லை, வேகமாக பரவி வந்தாலும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாது. எனவே, பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.

ஆனாலும், இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த பரவல், அடுத்த பேராபத்துக்கான அறிகுறியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மாநிலம் வாரியாக சுகாதாரத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கையை வேகப்படுத்துவது அவசியம். சளி, காய்ச்சல், உடல்வலி போன்றவை இப்புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறி ஆகும். கொரோனாவுக்கு அளிக்கும் சிகிச்சையே, இப்புதிய வகை கொரோனாவுக்கும் அளிக்கப்படுகிறது. எனவே, மக்கள் கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தால், நோய் தீவிரமாக பரவுவதை தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது