ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்; மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் நேற்று இந்தியாவுக்கு 6வது பதக்கம் கிடைத்தது. ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வியைத் சந்தித்த நிலையில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நேற்றிரவு போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸ்சுடன் அமன் ஷெராவத் மோதினார். போட்டி தொடங்கிய முதல் ஒரு நிமிடத்துக்குள்ளாகவே ஆதிக்கம் காட்டிய டேரியனுக்கு ஒரு புள்ளி கிடைத்தது. ஆனால் அடுத்த ஒரு சில நொடிகளிலேயே அமனின் கை ஓங்கியது. அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து அதிரடி காட்டிய அமன், முதல் பாதி முடிவில் 6-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். 2ம் பாதியின் தொடக்கத்தில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும் களமிறங்கிய அமன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை ஏற்றினார்.

போட்டியின் 6 நிமிட முடிவில் 13-5 என்ற கணக்கில் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை அமன் ஷெராவத் வென்றார். இந்தியாவுக்கு இது 5வது வெண்கலம் ஆகும். பதக்கம் வென்ற அமனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ” எங்கள் மல்யுத்த வீரர்களுக்கு மேலும் பெருமை! பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அமன் ஷெராராவத்துக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. இந்த அற்புதமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது” என பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், கரீனா கபூர், மீரா ராஜ்புத் ஆகியோர் மல்யுத்த வீரர் அமன் ஷெராராவத்தை பாரிஸ் ஒலிம்பிக் வெற்றிக்காக வாழ்த்தினர். இன்று இந்தியா 2 போட்டிகளில் களம் இறங்குகிறது. மகளிர் மல்யுத்தம் ப்ரீஸ்டை 76 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரித்திகா ஹுடா ரவுன்ட் 16 சுற்றில், ஹங்கேரியின் பெர்னாடெட் நாகியுடன் மோதுகிறார். இந்த போட்டி மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது. கோல்ப் மகளிர் பிரிவில் 4வது சுற்றில் அதிதி அசோக், திஷா தாகர் ஆடுகின்றனர். இந்த போட்டி மதியம் 1 மணி முதல் நடக்கிறது. பதக்க பட்டியலில் முதல் இடத்திற்கு அமெரிக்கா, சீனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி, 39 வெண்கலம் என 111 பதக்கத்தை வென்றுள்ளது. சீனா 33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என 83 பதக்கம் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரேட் பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடத்தில் உள்ளன. இந்தியா 6 பதக்கத்துடன் 69வது இடத்தில் உள்ளது.

நாளை நிறைவு விழா பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 26ம் தேதி பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்களாக போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான நாளை பெண்களுக்கான மாரத்தான், ஆடவர் ஹேண்ட்பால், மகளிர் கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் மல்யுத்தத்தில் மகளிர் 76 கிலோ எடை பிரிவில் போட்டி நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு கடைசி பதக்கமாக மகளிர் மல்யுத்த போட்டிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் இந்திய தேசிய கொடியை ஹாக்கி அணி கோல்கீப்பர் ஜேஷ், துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கம் வென்ற மனுபாக்கர் ஆகியோர் ஏந்திச்செல்ல உள்ளனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு