இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள தமிழக சாலைகளை அகலப்படுத்த ரூ.1,224 கோடி ஒப்புதல்

* மாநில தேசிய நெடுஞ்சாலை மூலம் பணிகள் நடைபெறும்
* சாலை பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது

சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில், தமிழகத்தில் உள்ள சாலை அகலப்படுத்தும் பணிகள் ரூ.1,224 கோடியில், மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 5,128 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,677 கிலோ மீட்டர் சாலைகள் மாநில நெடுஞ்சாலை துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் கீழ் வருகிறது. இச்சாலைகளின் பராமரிப்பு, விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான நிதியை ஆண்டுதோறும் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் வழங்கி வருகிறது. நடப்பாண்டு சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.2,559 கோடி நிதி கேட்கப்பட்டது. அதில், ரூ.2000 கோடிக்கு மேல் வர வேண்டியுள்ளது.

இந்நிலையில் இந்த நிதியை கேட்டு மாதத்துக்கு 2 முறை தமிழக தேசிய நெடுஞ்சாலைப்பிரிவு தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லி சென்று வருகின்றனர். ஆனாலும், ஒன்றிய அரசிடம் இருந்து இன்னும் நிதி விடுவிக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி மாநில பராமரிப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் புதுப்பிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என செய்திகள் வருகின்றன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் மழை மற்றும் அதிகளவு வாகனங்கள் செல்வதினால் சாலையில் ஏற்படும் குண்டும், குழிகளும் அவ்வபோது சரி செய்யப்பட்டு வருகிறது. சாலைகளில் பராமரிப்பு பணிகள் எந்த தொய்வுமின்றி நடைபெற்று வருகிறது என தேசிய நெடுஞ்சாலை பிரிவினர் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை பிரிவினர் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி கூறுகையில் : தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட வேண்டிய சாலை மற்றும் பாலப் பணிகள், புறவழிச்சாலை அமைத்தல் சாலை பாதுகாப்பு பணிகள் ஆகியவை ஆண்டுத்திட்டத்தின் கீழ் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர சாலை, பாலம் ஆகியவற்றிற்கான பராமரிப்பு பணிகளும், வெள்ள சேதப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் ஆண்டுத் திட்டம் 2021- 22ல் ரூ.2,792 கோடி மதிப்பிலான பணிகளுக்கும், ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் பல்வேறு நிலையில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசால் ஒவ்வொரு மாநிலத்திற்குமான அனுமதி உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதனடிப்படையில் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளைஅகலப்படுத்தும் பணி ரூ.1,224 கோடி மதிப்பிற்கு வைப்பு நிதியின் கீழ் ஒப்புதல் பெற்றப்பட்டு மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது