சோதனை ஓட்டத்தில் 5 கார்கள்

இந்தியச்சந்தையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிய கார்கள் அறிமுகமாகி வருகின்றன. மாருதி, மகிந்திரா, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் புதிதாக சந்தைப்படுத்த உள்ள கார்களின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இவற்றின் புகைப்படங்களும், விவரங்களும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இவற்றின் விவரம் வருமாறு:

மாருதி சுசூகி இவிஎக்ஸ்: மாருதி நிறுவனம் இவிஎக்ஸ் என்ற கான்செப்ட் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த வாகனக் கண்காட்சியில் அறிமுகம் செய்திருந்தது. மாருதி நிறுவனத்தில் இருந்து வரும் இந்த எலக்ட்ரிக் காரில் 60 கிலோவாட்அவர் பேட்டரி இடம் பெற்றிருக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 550 கி.மீ தூரம் செல்லலாம் என கூறப்படுகிறது.

மகிந்திரா தார்: மகிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி, 3 கதவுகள் கொண்ட காராக ஏற்கெனவே சந்தையில் உள்ளது. அடுத்ததாக, 5 கதவுகள் கொண்ட தார் எஸ்யுவியை அறிமுகம் செய்ய உள்ளதாக மகிந்திரா நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. புதிய எல்இடி ஹெட்லாம்ப்கள், பின்புறம் எல்இடி டெயில் லாம்ப்கள் மற்றும் கூரையை ஒட்டி ஸ்டாப் லாம்ப்கள் இடம் பெற்றுள்ளன. 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்களில் வர உள்ளது. அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கர்வ்: டாடா நிறுவனம் கர்வ் என்ற காரை ஏற்கெனவே காட்சிப்படுத்தியிருந்தது. ஆனால், இன்னும் சந்தைப்படுத்தப்படவில்லை. இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ டிஐ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதே மாடலின் எலக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த ஆண்டில் முதல் அரையாண்டுக்குள் இவை சந்தைக்கு வரலாம் என தெரிகிறது.

ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட்: ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா பேஸ்லிப்ட் காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் சந்தைப்படுத்த உள்ளது. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.

மகிந்திரா ஸ்கார்ப்பியோ பிக்-அப்: தென்னாப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த வாகனக் கண்காட்சியில், தார் மற்றும் ஸ்கார்ப்பியோ என் அடிப்படையிலான பிக் அப் எலக்ட்ரிக் வாகனங்களை மகிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. கான்செப்ட் மாடலான இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025ம் ஆண்டில்தான் இந்தியச் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்