பந்துவீச்சில் தாமதம் இந்திய அணிக்கு அபராதம்: 2 புள்ளிகளும் பறிப்பு

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த முதல் டெஸ்டில், பந்துவீச்சை பூர்த்தி செய்வதில் தாமதமாக செயல்பட்ட இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 2 புள்ளிகளும் பறிக்கப்பட்டது. சூப்பர்ஸ்போர்ட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன் குவித்து (ராகுல் 101, கோஹ்லி 38, ஷ்ரேயாஸ் 31, ஷர்துல் 24, ஜெய்ஸ்வால் 17) ஆல் அவுட்டானது.

தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றது (எல்கர் 185, யான்சென் 84*, பெடிங்காம் 56, ஸோர்ஸி 28, கோட்ஸீ 19).  163 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா, வெறும் 131 ரன்னுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. கோஹ்லி 76 ரன், கில் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.

இந்த நிலையில், முதல் டெஸ்டில் இந்திய அணி 2 ஓவர்கள் தாமதமாகப் பந்துவீசியதாக கள நடுவர்கள் அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில், இந்திய அணிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதித்த ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 2 புள்ளிகளை பறிக்கவும் உத்தரவிட்டார். இதனால், புள்ளிப் பட்டியலில் இந்தியா 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதல் 3 இடங்களில் உள்ளன.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்