இந்திய விவசாயத்தில் இயந்திரங்களின் தாக்கமும் வளர்ச்சியும்!

நமது நாட்டில் விவசாயம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல. அது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பேராற்றலாகவும் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அமுதசுரபியாகவும் விளங்குகிறது. நாடெங்கும் 58 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமே திகழ்கிறது. பாரம்பரியமாக இந்திய விவசாயமானது உடல் உழைப்பை நம்பியும், கால்நடைகளின் சக்தியைப் பயன்படுத்தியும் வந்தது. பின்பு அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இயந்திர மயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் உற்பத்தித் திறன் கூடியது. விவசாயம் செய்யும் நிலப்பரப்புகளின் அளவும் அதிகரிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர் பற்றாக்குறையை அது நிவர்த்தி செய்கிறது.
இந்திய விவசாயத்தில் இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட மாற்றங்கள் 1960க்கும் 70க்கும் இடைப்பட்ட பசுமைப் புரட்சியின் பொழுது தொடங்கியது. அது அதிக மகசூல் தரும் புதிய ரக விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் விவசாயத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிகழ்த்தியது. இந்தக் கண்டுபிடிப்புகளுடன் டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், நீர்ப்பாசன பம்புகளின் அறிமுகம் ஆகியவை விவசாயத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்த விதைப்பு, களை எடுத்தல், அறுவடை செய்தல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அதன் வளர்ச்சியை உள்ளடக்கிய இயந்திர மயமாக்கல் நிறைவு செய்கிறது.

இயந்திர மயமாக்கலின் தற்போதைய நிலையானது நிலத்தின் தன்மைக்கும், பயிர்களின் வகைக்கும் ஏற்ப மாறுபடு கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கோதுமை மற்றும் அரிசி சாகுபடிக்கு அதிக அளவில் இயந்திரங்களின் பயன்பாடு உதவுகிறது. இதற்கு நேர்மாறாக பீகார், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் அவற்றைப் பயன்படுத்துவதில் அம்மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன. இந்திய விவசாயத்தில் பொதுவாக டிராக்டர்கள் உழவு மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரம் ஹெக்டேருக்கு தோராயமாக 45 டிராக்டர்கள் எனும் எண்ணிக்கையில் அவை பயன்படுத்தப் படுகிறது. இது அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. இது வளர்ச்சிக்கான சாத்தியத்தைக் காட்டுகிறது.அறுவடை இயந்திரங்கள் கோதுமை மற்றும் அரிசி அறுவடையில் பெருமளவில் பங்களிப்பைச் செய்கின்றன. மனித வளத்தின் நேரத்தையும், உழைப்பையும் அது குறைக்கிறது. நடவு இயந்திரங்கள் மற்றும் களையெடுப்புக் கருவிகள் விவசாயத்தில் விவசாயியின் உடல் உழைப்பு, நேரம் ஆகியவற்றைப் பெருமளவில் மிச்சப்படுத்து கிறது. அதிநவீன நீர்ப்பாசன மோட்டார் மற்றும் பம்புகள் நீர் மேலாண்மை செய்வதற்கு பெரிதும் பயன்படுகின்றன. நீர் வீணாவதை இவை அறவே தவிர்க்க உதவுகிறது. இயந்திரமயமாக்கலானது விவசாயத்தில் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. பயிரின் விளைச்சலை அதிகரித்து உற்பத்தித் திறனை மேம் படுத்துகிறது. மேலும் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கவும் வழிவகை செய்கிறது.

நகர்ப்புற இடப்பெயர்ச்சி மற்றும் பல்வேறு இதர காரணங்களால் ஏற்படும் விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறையினை ஈடுகட்ட இயந்திரங்கள் பெருமளவில் கைகொடுக்கின்றன. இயந்திரங்களின் ஆரம்ப முதலீடு அதிகமாக இருந்தாலும், காலப்போக்கில் அது பயனுள்ளதாக மாறுகிறது. ஆட்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை வெகுவாக மிச்சம் செய்ய ஏதுவாகிறது. இயந்திரங்கள் துல்லியமாக செயல்படுவதால் தேவையான விதைகளை இடுதல், அளவான உரங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகியவற்றைத் திறம்பட செயல்படுத்துகிறது. நவீன இயந்திரங்கள் துல்லியமான விவசாய நடைமுறைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தண்ணீர், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்த்து அதன் மேம்பாட்டைப் பாதுகாக்கிறது.

ஆயினும் இயந்திரங்களால் பல்வேறு நன்மைகள் இருப்பினும், சில சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது அதிகபட்ச ஆரம்ப கட்ட முதலீடு, இதனால் எளிய சிறு, குறு விவசாயிகள் இயந்திரங்களை வாங்குவதில் பின்னடைவுகள் ஏற்படுகின்றன. பல விவசாயிகள் இயந்திரங்களை வாங்குவதற்கு மானியங்களுடன் கூடிய கடனைப் பெற வங்கிகளோடு போராட வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும் சாலைகள், சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட மோசமான கிராமப்புற கட்டமைப்பு, இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தடையாக நிற்கின்றன. இயந்திரங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப அறிவில் அதிகப்படியான இடைவெளி காணப்படுகிறது. இதனைக் குறைப்பதற்குத் தேவையான பயிற்சிகள் அவசியமாகிறது.

விவசாயத் துறையை மாற்றி அமைப்பதில் இயந்திர மயமாக்கலின் முக்கியப் பங்கை இந்திய அரசு அங்கீகரித்திருக்கிறது. மேலும் அதை மேம்படுத்த பல்வேறு திட்டங்களையும் அது கொண்டிருக்கிறது. துல்லியமான விவசாயம், ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் இந்திய விவசாயத்தை வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்கின்றன. இவை உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் தமது பங்களிப்பைச் செலுத்துகின்றன. 21ம் நூற்றாண்டில் இந்திய விவசாயம் புரட்சிகரமான சாதனையை எட்டிப் பிடிப்பதற்கு இயந்திரமயமாக்கல் பெரியளவில் உதவிபுரியும் என்பதில் எள்ளளவிலும் ஐயம் இல்லை. 

 

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்