இந்திய விமானப்படை தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படை தளபதியாக தற்போது ஏர் சீப் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து விமானப்படை தலைமை தளபதி பதவிக்கு அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 1964ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பிறந்த அமர் ப்ரீத் சிங் தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.

1984 டிசம்பரில் இந்திய விமானப்படையின் போர் விமான ஓட்டத்தில் பணியமர்த்தப்பட்ட இவர் பயிற்றுவிப்பு மற்றும் வௌிநாட்டு விமானங்களில் திறம்பட பணியாற்றியவர். மிக்-27 ரக விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றிய இவர், மிக்-29 திட்ட மேலாண்மை குழுவை வழி நடத்தினார். தென்மேற்கு விமான கட்டளையில் விமான பாதுகாப்பு தளபதியாகவும், கிழக்கு விமானப்படையில் மூத்த விமான பணியாளர் அதிகாரியாகவும், மத்திய விமானப்படையின் தலைமை தளபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். அவர் வரும் 30ம் தேதி பிற்பகலில் நடைமுறைக்கு வரும் வகையில் விமானப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்பார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை