இந்திய விமானப்படையின் ஏர் ஷோ சென்னை குலுங்கியது: 15 லட்சம் பேர் பரவசம்

சென்னை: இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சியை(ஏர் ஷோ) காண மெரினா கடற்கரை பகுதியில் குடும்பம் குடும்பங்களாக 15 லட்சம் பேர் குவிந்ததால் சென்னையே குலுங்கியது. வர்ண ஜாலங்களுடன் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை மக்கள் கரகோஷத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

இந்திய விமானப்படையின் 92வது தின நிறுவன நாள் வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்திய விமானப்படை சார்பில் ‘வான் சாகச’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வீரத்தை பரைசாற்றும் வகையில் வான் சாகச நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் விமானப்படையின் வலிமை மற்றும் சாகசத்தை பார்க்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்திய விமானப்படை, வான் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

பொதுமக்கள் எளிமையாக கண்டு ரசிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இணைந்து செய்துள்ளது. விமானப்படை அதிகாரிகள் இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசிப்பார்கள் என்று கணித்துள்ளனர். அதை உறுதி செய்யும் வகையில் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக லிம்கா சாதனை நிர்வாகிகளும் சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்துள்ளனர்.

விமானப்படையின் சாகச ஒத்திகை நிகழ்ச்சியின் போதே மெரினா பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். இதனால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் 6,500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர குதிரைப்படை வீர்களும் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தை பொருத்தமட்டில் சென்னை மெரினா காமராஜர் சாலையை இணைக்கும் சாந்தோம் நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராஜாஜி சாலைகளில் இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை சரிசெய்யும் வகையில் கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 2 ஆயிரம் போக்குவரத்து போலீசார் காலை முதல் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் சாரை சாரையாக இருசக்கர வாகனங்கள், கார்களில் மெரினா பகுதியில் காலை 7 மணி முதலே குவிய தொடங்கினர். அதேபோல் மெரினா பகுதியில் மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், அனுமதி பாஸ் வழங்கப்பட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்ப்பட்டிருந்தது.

இதுதவிர பொதுமக்கள் பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினரும் மெரினா கடற்கரை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். விமானப்படை சாகசத்தை காண தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர்.

முதல்வர் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்ததும், விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள், முதல்வரை நோக்கி கரகோஷங்கள் எழுப்பினர். அதை கண்டு முதல்வர் தனது கைகளை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். பாதுகாப்பை பொருத்தமட்டில் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என தனித்தனியாக தடுப்புகள் அமைத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர். சாகசத்தை காணவந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் இசட் பாதுகாப்பில் இருந்ததால் போலீசார் பொதுமக்கள் அவர்களிடம் வராதபடி கவனமாக பணியில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் 11 மணி நிலவரப்படி மெரினா கடற்கரையில் மட்டும் 8 லட்சம் பேர் குவிந்தனர். இதுதவிர காமராஜர் சாலை, மெரினா சர்வீஸ் சாலைகள், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை உள்ளிட்ட பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஆக மொத்தம் சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியை விமானப்படை அதிகாரிகள் கணித்தப்படி 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பலர் அடையார், பாரிமுனை, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மெரினா பகுதிக்கு செல்ல முடியாததால் ஆங்காங்கே தங்களது வாகனங்களை சாலையோரமே நிறுத்தி விமானங்களின் சாகசத்தை கண்டு ரசித்தனர்.

இந்த சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண், சாரங் ஹெலிகாப்டர்கள், பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட், தேஜஸ், ரபேல் மற்றும் மெரினா உள்ளிட்ட தமிழ் பெயரிடப்பட்ட விமானங்கள் என 72 விமானங்கள் கலந்து கொண்டன. மெரினா கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதும், அதை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் குதித்து தீவிரவாதிகளை வேட்டையாடும் காட்சிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர். அதை பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.

குறிப்பாக, இந்த சாகச நிகழ்ச்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக் கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்றன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள் என அனைத்து வகையான போர் விமானங்களும் இந்த சாகசத்தில் ஈடுபட்டன.

விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் நாட்டின் மூவண்ண கொடியுடன் சாகசம் செய்தபடி மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து இருந்த பகுதியில் வீரர்கள் தரையிறங்கினர். அதேபோல் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்டு முதல் முறையாக சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் தனது வலிமையை பறைசாற்றும் வகையில் சாகச நிகழ்ச்சி செய்தது. அதை பொதுமக்கள் வெயிலையும் பொருப்படுத்தாமல் வானத்தை பார்த்தப்படி வியந்து ரசித்தனர்.

இதற்கு முன்பு கடந்த 2003ம் ஆண்டு விமானப்படை தினத்தன்று சென்னையில் வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடந்ததால் சென்னை மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பணிகள் என மொத்தம் 15 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்.

தமிழ் பெயர் சூட்டப்பட்ட போர் விமானங்கள்
விமான சாகசத்தில் ஈடுபட்ட போர் விமானங்களுக்கு விமானப்படை தமிழ் பெயர்கள் சூட்டி இருந்தது. அதன்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போர் விமானங்களுக்கு சங்கம், பல்லவா, கலாம், காவேரி, காஞ்சி, நட்ராஜ், தனுஷ், நீலகிரி, கார்த்திகேய், மெரினா என முதல்முறையாக தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது.பொதுமக்களுக்கு போர் விமானங்களின் சிறப்பு குறித்து தமிழில் வர்ணனை சாகசத்தில் ஈடுபட்ட போர் விமானங்களின் திறன், குண்டுகள் எறியும் வகை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழில் வர்ணனை செய்யப்பட்டது. அதேநேரம் ஒவ்வொரு வான் சாகசத்திலும் கலந்து கொள்ளும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்