திரு இந்தளூர் பரிமள ரங்கநாதன்

திருமங்கையாழ்வாருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் எதிர்பாராதது. நெடுந்தொலைவு கடந்து தான் தரிசிக்க வந்தபோது, திருஇந்தளூர் தலத்துப் பெருமாள் என்னவோ தன்னைப் பார்க்க விரும்பாதவன்போல தன் கோயில் கதவை சாத்திக்கொண்டது, அவருக்குப் பெருத்த வேதனையைக் கொடுத்தது. திருமாலுக்கும், தனக்குமிடையேயான பந்தத்தில், தான் அதிகப்படியான சலுகைகளை எதிர்பார்க்கிறோமோ என்றும் அவர் சிந்தித்தார். அல்லது அவனது சேவையே தன் வாழ்க்கை என்று தீர்மானித்து அதன்படி அவன் கொலுவிருக்கும் ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்று தரிசித்து, மங்களாசாசனம் செய்த உரிமையில், தான் எப்போது வந்தாலும் தனக்கு அவன் தரிசனம் தரத் தயாராக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கூடுதலாகவே எதிர்பார்த்தது தப்போ? கோயில் ஒழுகலாறுப்படி, குறிப்பிட்ட நேரங்களில் நடை சாத்துவது என்ற சம்பிரதாயப்படி, தான்தான் நேரத்தை அனுசரித்து வந்திருக்க வேண்டுமோ……

ஆனாலும் தன்மீது இத்தனை அபிமானம் கொண்ட பரந்தாமன் இப்படி பாராமுகமாய் இருந்து தன்னைப் புறக்கணிப்பது கொஞ்சமும் நியாயம் இல்லை என்று கோபமே கொண்டார் ஆழ்வார். அதனாலேயே இந்தத் தலத்துப் பெருமாளான பரிமளரங்கனுடன் வாதம் புரிவதுபோலவே அவர் பத்துப் பாடல்களை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பொதுவாகவே தன்னை ஒரு தாயாக அல்லது மகளாக உருவகப்படுத்திக் கொண்டு இவ்வாறு பாசுரங்கள் இயற்றும் இயல்பு கொண்ட திருமங்கையாழ்வார், இந்த திருஇந்தளூர் தலத்தில் மட்டும் தன்னையே முன்னிருத்திப் பாடினார். அதுவும் எப்படி? உரிமை மிகுந்த சாடலாக! இந்த சாடல்களுக்குப் பெருமாளும் பதிலளிப்பதாகவும், இருவரும் தொடர்ந்து வாதம் புரிவது போலவுமே இந்தப் பாசுரங்களின் உள்ளீடு நமக்கு உணர்த்துகிறது.

‘உனது அடிமை நான். இது உனக்கு நன்கு தெரிந்த உண்மை. இருந்தும், நான் வந்தபோது கதவைத் தாளிட்டுக்கொள்ள உனக்கு எப்படி மனம் வந்தது? என்னைத் தவிர்ப்பது உனக்கு விளையாட்டாக இருக்கலாம்; ஆனால் இப்படி செய்தாய் என்று உலகோர் உன் மீதுதான் பழி பேசுவார்கள், தெரியுமா?’ என்று கேட்கிறார், திருமங்கையாழ்வார்.

‘பேசினால் பேசிவிட்டுப் போகட்டுமே, அதைப் பற்றி நீ கவலைப்படவேண்டாம்’ என்று ஆழ்வாருக்குப் பெருமாள் பதிலளித்தாகக் கொண்டு, ‘அதெப்படி? உன்னைப் பழித்தாலும் நீ பொறுத்துக்கொள்வாய். ஆனால் எனக்கு நீ தரிசனம் தராத என் துரதிருஷ்டத்தை ஊரார் கேலி செய்தால், அதை உன்னால் பொறுத்துக்கொள்ள முடியுமா?’ என்று ஆழ்வார் திரும்பக் கேட்கிறார். தன்னை ஏமாற்றினாலும், ‘திரிதந்தாகிலும் தேவபிரானுடையக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்,’ என்று தன்னால் பெருமாளை விடமுடியாத இயலாமையை, பக்தி பந்தத்தைச் சொல்கிறார்.

இப்போதும் பெருமாள் மௌனம் சாதிக்கிறார். மீண்டும், ஆழ்வார், ‘தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்,’ என்று கெஞ்சுகிறார். அதாவது, ‘எல்லா திவ்ய தேசங்களிலும் அர்ச்சாவதாரமாக அனைவருக்கும் தரிசனம் நல்கும் நீ, இங்கும் அதே அர்ச்சாவதாரம் எடுத்து நிற்கிறாய். இங்கு மட்டும் எனக்கு தரிசனம் தர முடியாதென மறுப்பதேன்?’ என்று பொருள்.

இவருடன் மேலும் பொய்ப் பிணக்கு கொள்ளும் வகையாக உள்ளூர சிரித்தபடி பரிமளரங்கன் தொடர்ந்து மௌனம் காத்தார். அவ்வளவுதான், ஆழ்வாருக்குக் கோபம் பொங்கியது. ‘சரி, தரிசனம் காட்டமாட்டாய், அவ்வளவுதானே? சரி போ, உன் அவதாரத்தை உன்னோடேயே வைத்துக்கொள்’ என்று வெறுப்பாகச் சொல்லிவிட்டுத் திரும்பயத்தனிக்கிறார்.

அவ்வளவுதான், பரிமளரங்கன் ‘பதறி’ப் போனார். இப்போதைக்கு இவரை விட்டுவிட்டால், அப்புறம், இவரால் மங்களாசாசனம் செய்விக்கப்படாமல் போய்விடுவோமோ என்ற ‘அச்சம்’ எழுந்தது! உடனே அவருக்கு தரிசனமளித்தார்.  இந்த ‘உரையாடல்’ பாசுரம் இதுதான்:

ஆசை வழுவா தேத்து
மெமக்கிங் கிழுக்காய்த்து அடியோர்க்கு
தேசமறிய உமக்கே
யாளாய்ச் திரிகின்றோமுக்கு
காசினொளியில் திகழும்
வண்ணம் காட்டீர்
எம்பெருமான்
காசி வல்லீர் இந்தளூரீர்
வாழ்ந்தே போம் நீரே

இந்த அனுபவத்தைக் கொண்டதாலோ என்னவோ, தொண்டை நாட்டு திவ்ய தேசமான திருநீர் மலையில் தான் நீர்வண்ணப் பெருமாளை தரிசிப்பதற்காக மாதக்கணக்கில், திருமங்கையாழ்வார் பொறுமையாகக் காத்திருந்தார் போலிருக்கிறது! ஆமாம், ஊழிப் பிரளயமாக திருநீர்மலையை மாதக்கணக்கில் நீர் சூழ்ந்திருக்க, அது வற்றட்டுமென்றும், அதன் பிறகு நீர்வண்ணப் பெருமாளை தரிசிப்பது என்றும் அவர் பூதத்தாழ்வாரோடு சேர்ந்து காத்திருந்த அனுபவம் அவருக்கு உண்டானது!

இந்து என்றால் சந்திரன் என்று பொருள். தன் மனைவியரில் ரோகிணிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிறரை அலட்சியப்படுத்தியதால், அந்தப் பெண்களின் தகப்பனான தட்சனால் சாபமிடப்பட்டு, தன் அழகு குன்ற வருந்தினான் சந்திரன். இந்தத் தலத்துக்கு வந்து ஒரு பொய்கையை உருவாக்கி, பெருமாளை நோக்கி தவமிருந்து சாப விமோசனம் பெற்றான். இதனாலேயே இந்த தலம் இந்துபுரி என்றழைக்கப்பட்டது. இவனுக்காக தன் நாயகனிடம் சிபாரிசு செய்து சாப விமோசனத் துக்கு உதவியதால் இந்த தலத்துத் தாயார், சந்திர சாப விமோசன வல்லி என்று போற்றப்படுகிறாள். தன்னை சாபத்திலிருந்து விடுவித்ததால் பரிமளரங் கனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பங்குனி மாதத்தில் சந்திரன் நடத்தி வைத்த பிரமோற்சவம், இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, கூடுதல் சாட்சியாக, பரிமளரங்கன் சந்நதியில், அவர் கால்மாட்டில் அமர்ந்து சந்திரன் துதி செய்கிறான். மேலும், இந்த சந்நதியின் இடப்பக்கத்தில் சந்திரன் விக்ரகமாகவும் மேற்கு நோக்கிபடியும் காட்சி தருகிறான். அவனுக்கு எதிரே சூரியன் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறான். சந்திரன், சூரியன் இருவரும் பெருமாளுக்குப் பரிவார தேவதைகளாக விளங்குகிறார்கள். இது இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு.

சுவாமிக்குப் பரிமளரங்கன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?

பிரம்மனிடமிருந்து அசுரர்கள் வேதங்களைக் களவாடிச் சென்றார்கள். அதனால் பிரம்மனின் இயக்கங்கள் ஸ்தம்பித்துப் போயின. அவன் மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர் அரக்கர்களை வதைத்து வேதங்களை மீட்டுத் தந்தார். ஆனால் தீயவர்களின் ஆளுகைக்குள் கொஞ்ச காலம் அந்த வேதங்கள் ஆட்பட்டிருந்ததால், அவை துர்நாற்றம் கொண்டவையாக விளங்கின. அந்த அழுக்கையும், துர்நாற்றத்தையும் போக்க, இந்தளூர் பெருமாள் தன் அருளால் நல்லப் பரிமளத்தை (நறுமணத்தை)க் கொடுத்தார். அதனாலேயே இவர் பரிமள ரங்கனானார். இதனாலேயே இந்துபுரி என்ற இந்த ஊர், சுகந்தாரண்யம் என்றும் அழைக்கப்பட்டது. இன்னொரு காரணமும் உண்டு. இந்தளம் என்றால் தூபக்கால் என்று பொருள். பூஜையறையில் சிறு அளவில் தூபம் ஏற்ற நாம் பயன்படுத்தும் தூபக்கால் வீடு முழுவதும் நறுமணம் பரப்புவதுபோல, துர்நாற்றம் கொண்டிருந்த வேதங்களுக்கு இந்த ஊரே பெரியதொரு தூபக்காலாக நின்று நல்மணம் அளித்து, உலகெங்கும் அந்த சுகந்தம் பரவும்படிச் செய்தவர் இந்தப் பெருமாள்.

இதனாலும் இந்த ஊர், இந்தளூர். காவிரி பாயும் திவ்ய தேசங்களான மைசூர் திருவரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், கோயிலடி, திருக்குடந்தை, திருஇந்தளூர் ஆகிய இந்த ஐந்து தலங்களில் திருஇந்தளூருக்கு மட்டும் கூடுதல் பெருமை உண்டு. அது என்ன?

ஒரு புராண விளக்கம் பார்ப்போம். காவிரி மீது இந்தப் பெருமாள் கொண்டிருந்த தனிக் கரிசனம் என்றே சொல்லலாம். கங்கையைவிட தனக்கு மதிப்பு குறைந்திருப்பதாக வருந்திய காவிரி, இவரிடம் வந்து தன் மனக்குறையை வெளிப்படுத்தி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டாள். அதைக் கண்டு நெகிழ்ந்த பரிமளரங்கன், அவள் முன் தோன்றி, அவளுக்கு உரிய மதிப்பைத் தான் அளிப்பதாக அருளினார். காவிரியின் மூலப்பகுதியிலிருந்து அவள் ஓடும் வழியெல்லாம் தாம் உறுதுணையாக வருவதாகவும், குறிப்பாக இந்தளூர் பகுதியில் அவளுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் சொன்னார். அதாவது தன்னில் நீராடுவதால், மக்கள் தம் பாவங்களையெல்லாம் தன்னில் கரைத்துவிட, அதனால் தன் புனிதம் மாசுபட்டுவிட்டதாகவும், தான் மீண்டும் புனிதப்பட வேண்டும் என்றும் கங்கை வருந்தியது.

அந்த கங்கை துலா (ஐப்பசி) மாதத்தில், இந்தத் தலத்துக்கு வந்து காவிரியுடன் கலந்தால் அந்தப் பாபமெல்லாம் விலகி கங்கை தூய்மையானவளாகிவிடுவாள் என்று விதி செய்தார் பரிமள ரங்கன். கங்கையின் களங்கத்தையே நீக்கிய பெருமையை காவிரிக்கு அளித்து அவளை மகிழ்வித்தார் எம்பெருமான். இதன் சாட்சியாக பரிமளரங்கன் கருவறையில் அவரது காலடியில் கங்கையும், தலைமாட்டில் காவிரியும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதன்படி ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் கங்கை வந்து இங்கே காவிரியுடன் கலப்பதாக ஐதீகம். அதனாலேயே இந்த மாதத்தில் கங்கைக்கே பாபம் போக்கிய காவிரி தம் பாபங்களையும் எளிதில் போக்குவாள் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் இங்கு வந்து நீராடுகிறார்கள். இதனை துலா ஸ்நானம் என்றழைக்கிறார்கள். இந்த மாதம் முழுவதும் இங்கே திருவிழாக்கோலம் களைகட்டும்.

இந்த நீராடலை ஐப்பசி மாதம் முழுவதுமல்லாமல், அடுத்து ஒருநாளும் மேற்கொள்கிறார்கள். அதாவது கார்த்திகை முதல் தேதி. இப்படி ஒருநாள் நீட்டிப்பானேன்? கால்கள் ஊனமுற்ற ஒரு பக்தன் துலா ஸ்நானம் செய்ய விரும்பி இந்த ஊரை நோக்கி மெல்ல வந்தான். அவன் வந்து சேருவதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து அடுத்த நாள் விடிந்துவிட்டது. ‘பகவானே, புனிதக் காவிரியில் நீராடி, உன்னை சேவித்து, நற்பேறு பெற நினைத்தேனே, எனக்கு ஏன் இந்த துரதிருஷ்டம்?’ என்று மனம் வெதும்பி பரிமள ரங்கனிடம் மனதார முறையிட்டான். பெருமாளோ, ‘இன்றும் நீ நீராடலாம்; உடல் ஊனமுற்றிருந்தாலும், துலா ஸ்நானம் செய்ய விரும்பி வந்த நீ ஏமாற வேண்டியதில்லை. உன்னைப் பொறுத்தவரை இன்றும் உனக்கு துலா ஸ்நானம்தான்?’ என்று அசரீரியாக வாக்களித்தார். பெரிதும் மகிழ்ந்த அந்த ஊனமுற்ற பக்தன், அவ்வாறே நீராடி, பேறு பெற்றான். அதனால் இந்த நாளில் மேற்கொள்ளும் நீராடலை ‘முடவன் முழுக்கு’ என்று குறிப்பிட்டார்கள்.

துலா ஸ்நானத்துக்குத் தானே முன்னோடியாகத் திகழவேண்டும் என்று பெருமாள் விரும்பினார் போலிருக்கிறது. அதனால், ஒவ்வொரு ஐப்பசி மாதப் பிறப்பு மற்றும் அமாவாசை நாட்களில் பரிமளரங்கப் பெருமாள் கருட வாகனத்தில் காவிரிக்கு எழுந்தருளுகிறார்; தீர்த்தவாரி காண்கிறார். பிறகு ஐப்பசி மாத முதல் 20 நாட்களுக்கு பெருமாள் சார்பாக விஷ்வக்சேனர் காவிரி கரைக்குச் சென்று தீர்த்தம் அருளுகிறார். கடைசி பத்து நாட்களுக்கு துலாத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த நாட்களில் பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரம் பூண்டு, நான்கு வீதிகளிலும் வலம் வந்து, காவிரிக் கரையிலிருக்கும் துலா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்; தீர்த்தம் வழங்குவார். ஒன்பதாம் நாளன்று திருத்தேர் திருவிழா. தேரிலேயே மீண்டும் காவிரி கரைக்கு வந்து கடைமுகத் தீர்த்தம் அருள்வார்.

காவிரித் தாய் அப்படியே அகமகிழ்ந்து போவதை அந்த சமயத்து நீரோட்டத்தின் தன்மையிலிருந்தே புரிந்து கொள்ளலாம். தான் வரமளித்ததற்குச் சற்றும் குறைவில்லாதபடி இன்றளவும் பரிமளரங்கன் அவளுக்கு அருள் பாலிப்பதைக் காண ஒவ்வொரு பக்தர் நெஞ்சமும் நெகிழும்.

சந்நதித் தெரு வழியாக கோயிலுக்குள் செல்லாம். தெருமுனையிலேயே அனுமன் தனி சந்நதியில் காட்சி தருகிறார். தன் கோயிலை விட்டு சற்றுத் தொலைவில் இந்த சந்நதி அமைந்திருந்தாலும், பரிமளரங்கன், இந்த சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கு தினமும் இரு வேளைகளிலும் அமுது அனுப்பி வைக்கிறார்! அதுவும் மேள தாளத்தோடு, சகல மரியாதைகளுடன்! பெருமாளின் கருணைக்குதான் அணை ஏது!

பெருமாளின் தோற்றம் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. நான்கு கரங்களுடன் வீர சயனம் கொண்டிருக்கிறார். இரு கரங்களால் அருளியது போதாது என்று நான்கு கரங்களால் தம் அருளை வாரி வழங்குகிறார் பரிமளரங்கன். மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளான அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அள்ளித் தந்து, வீடு பேற்றையும் நிறைவாக நல்கும்வகையில் நான்கு கரங்கள் கொண்டிருக்கிறாரோ! இந்தக் கோலத்தை வீர சயனம் என்றும் வர்ணிக்கிறார்கள்.

ஆமாம், தம் பக்தருக்கு ஏற்படும் தடைகளை தகர்த்தெறியும் வீரம். அவரருகே கங்கை, காவிரி, பிரம்மா, சந்திரன் ஆகியோர் உடன் உறைந்து அவரைப் போற்றித் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். உற்சவர் ஸ்ரீதேவி&பூதேவி சமேதராக எழில் கோலம் காட்டுகிறார். கருவறை சுற்றில் ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார், சந்திரன் சாப விமோசன தாயார் ஆகியோர் சந்நதிகள் உள்ளன. பரிமளரங்கன் திருக்கோயிலை விட்டு வெளியே வரும்போது மனம் நிறைய மணம் சூழ்வதை அனுபவித்துதான் உணர முடியும்.

தியான ஸ்லோகம்
“ஸ்ரீமத் ஸுகந்தி வபினே பணிராஜ சாயீ
சந்த்ராக மோசன
பரா தயிதேந்து தீர்த்தம்
தஸ்மிந் ஸுகந்த வநநாத விமாநவர்யம்
ப்ராசீ முகோ விதிநுத: கலு வேத மோதம்’’

எப்படிப் போவது?: மயிலாடுதுறை நகரத்துக்குள்ளேயே அமைந்திருக்கிறது திருஇந்தளூர். பேருந்து ஆட்டோ வசதி உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் 11.30 மணிவரை; மாலை 5.30 முதல் 9 மணிவரை. முகவரி: அருள்மிகு பரிமளரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை நகர் மற்றும் வட்டம், நாகை மாவட்டம் – 609001.

Related posts

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

சிதைவிலும் அழகு

வாழ்வினை செதுக்கும் சிற்பிகள்