‘இந்தியா’ வெல்லும்; அதை 2024 சொல்லும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமலாக்கத்துறையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜ அரசின் ஜனநாயக விரோதப் போக்கை தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் மட்டுமின்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல்வாதிகள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த இரு அமைச்சர்களை மட்டும் குறிவைத்துப் பாய்ந்துள்ள நடவடிக்கை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாக கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் 26 கட்சிகளின் ஒருங்கிணைப்பாக இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருமித்த சிந்தனையுடன் ஒன்றுபட்டிருக்கும் இயக்கங்கள் அடங்கிய கூட்டணிக்குப் பொருத்தமான ஒரு பெயர் பற்றிய ஆலோசனைகளும் சிந்தனைகளும் வெளிப்பட்டபோது, அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயர்தான் இந்தியா.

இந்திய ஒன்றியம் முழுவதும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்திய மாநிலங்கள் அனைத்தும் பாரபட்சமின்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியினைப் பெற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியா ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது. ராகுல் காந்தி, இந்தியா என்ற கூட்டணியின் பெயரை முன்மொழியுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடமும், வழிமொழியுமாறு உங்களில் ஒருவனும் தமிழ்நாட்டின் முதல்வருமான என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியே கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் தனது கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போதும், அந்தமானில் பேசியபோதும் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திமுகவைத் தேவையின்றி விமர்சித்துப் பேசினார். பெங்களூரு நகரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட நிலையில், அவசர அவசரமாக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது. அதிமுகவின் ஒரு பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் பழனிசாமி உள்பட பல கட்சியினரும் விழுந்தடித்து ஓடி, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர்.

ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது ‘ப்ளாக் காமெடி’ எனப்படும் வேடிக்கையான வேதனை. இவர்களிடமிருந்து இந்தியாவைக் காத்திடவும், 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது.

இத்தனை நாள் இந்தியாவின் தேசபக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல செயல்பட்டு வந்த பாஜவினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது. இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாக ஆகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பாஜவினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பாஜவுக்கும், அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா‘ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அமலாக்கத்துறைக்கு ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி. இந்தியாவின் எதிரிகளான மதவாத, ஜனநாயக விரோத, மாநில உரிமைகளைப் பறிக்கும் சக்திகளை உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் அடையாளம் காண்பீர். மக்களிடம் அடையாளப்படுத்துவீர். எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது ‘ப்ளாக் காமெடி’ எனப்படும் வேடிக்கையான வேதனை.

Related posts

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடியின் தாக்குதலை மக்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டுள்ளனர்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்