இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை உலக கோப்பை கிரிக்கெட்: ஆதிக்கத்தை தொடர ரோகித் அன் கோ உறுதி

 

அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு போட்டி என்றால், அது இந்தியா – பாகிஸ்தான் மோதலாகத் தான் இருக்கும். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில், இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்ததால் அந்த போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன. இந்த நிலையில், உலக கோப்பையில் விளையாடுவதற்கான இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

ரோகித் தலைமையிலான இந்திய அணியும் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை தொடர்ச்சியாக வென்றள்ளது. இரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா 3வது இடத்திலும், பாகிஸ்தான் 4வது இடத்திலும் உள்ளன. நடப்பு தொடரில் இந்த அணிகள் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம், அகமதாபாத் மோடி அரங்கில் இன்று நடைபெறுகிறது. இதுவரை நடந்த ஆட்டங்களில் இந்தியா விளையாடிய ஆட்டங்களுக்கு மட்டுமே 80 முதல் 90 சதவீத அரங்கம் நிறைந்திருந்தது. மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம், இந்தியா – பாக். மோதலுக்கான டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்துள்ளதால், மோடி அரங்கம் இன்று நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன

உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 7-0 என முன்னிலை வகிப்பதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் கையே ஒங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கில் மீண்டும் அணியில் இணைய உள்ளதால் இஷான் உட்கார வைக்கப்படலாம். அஷ்வின், ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் கடந்த 2 போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதிலும் இலங்கைக்கு எதிராக ரிஸ்வான் கால் வலியையும் பொருட்படுத்தாமல் சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். அப்துல்லா, ஹசன் அலி, ஹரிஸ் ராவுப் என பல வீரர்கள் பொறுப்பாக விளையாடி வருகின்றனர்.

உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் மீதான இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா, இல்லை இம்முறை பாக். அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்விக்கு விடையளிக்க உள்ள இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது