3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு பெட்டக முனையம் தொடக்க விழா, துறைமுகத்தில் உள்ள 9வது தளத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமை வகித்து இதனை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது: வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதிய சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். 14 மீட்டருக்கும் அதிக ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி. துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். புதிய முனையம், துறைமுகத்தில் தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் முக்கிய பங்காற்றியுள்ளது. 3 பெரிய துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்களுடன், தமிழ்நாடு கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது.

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க, வெளிதுறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்க, இந்தியா ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்து, வ.உ.சி துறைமுகத்தின் திறன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது. இந்த வளர்ந்து வரும் திறன், நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகும். இந்த உத்வேகம் விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றும். இந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ஒன்றிய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி, கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன், துறைமுக ஆணைய தலைவர் சுசந்த குமார் புரோஹித், கலெக்டர் இளம்பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு