ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் காமராஜர் : பழனிசாமி, அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை :பெ ருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : எளிமை, நேர்மை இவையே தனது கொள்கையென கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்ந்த கர்ம வீரர், கல்விக் கண் திறந்த தர்ம சீலர், மக்கள் மனதில் என்றும் நீங்கா புகழ் கொண்ட போற்றுதலுக்குரிய அய்யா திரு.காமராஜர் அவர்களின் 121 ஆவது பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்கி, சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் : எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் : தமிழ்நாட்டில் அரசியல், சமூக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த கர்மவீரர் காமராசருக்கு இன்று 121ஆம் பிறந்தநாள். ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசக் கல்வி, குலக்கல்வி என்ற முறையில் பறிக்கப்பட்ட நிலையில், புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகிய துறைகளிலும் எண்ணிலடங்காத திட்டங்களை செயல்படுத்திய விருதுப்பட்டி வீரர் அவர். அவரது பெருமைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்காக அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்கும் நிலையை உருவாக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!”.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : கல்வியிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராசருக்கு இன்று 121ஆம் பிறந்தநாள். தமிழ்நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்!

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு