இந்தியாவை காப்பாற்றுவதற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமியின் மகள் டாக்டர் ஏ.கே.எஸ்.தாரணி-டக்டர் எம்.பரத் கவுசிக் ஆகியோரது திருமணம் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை நடைபெற்றது. திருமண விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவர்களும், இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்க்கூடிய திருமணம். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால் இது தமிழ் திருமணம். இந்த தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தவர் கலைஞர் என்பதை நாடு மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட சீர்திருத்த திருமணமாக சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. கிருஷ்ணசாமி எம்எல்ஏ பழகுவதற்கு இனியவர். அதுமட்டுல்ல உறுதியானவர். இந்த திருமணத்தை நாங்கள் அவர் வீட்டு திருமணமாக பார்ப்பதில்லை. எங்கள் வீட்டு திருமணமாகத் தான் பார்க்கிறோம்.

நாட்டில் இருக்கக்கூடிய நிலமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக எந்த கருத்தை சொன்னாலும் அவர்கள் மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள். எனவே எதிர்கட்சிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் பாஜக ஈடுபடுகிறது. அதற்காக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை இன்னும் சொல்லப் போனால் செல்போன் ஒட்டுக் கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளனர்.

ஒரு பெரிய நிறுவனம் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர். ஆக எதிர்கட்சி தலைவர்களுக்கு சுட்டி காட்டி கடிதம் எழுதியுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்த உடன், ஒன்றிய அமைச்சர் ஒருவர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இது கேலிக் கூத்தாக உள்ளது. செய்வதையும் செய்து விட்டு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சொல்கிறார் என்றால் அந்த அளவுக்கு நாட்டிலே கொடுமைகளை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை பொறுத்தவரை தோல்வி பயம் வந்துவிட்டது.

இந்தியா கூட்டணி அவர்கள் எதிர்பாரத வகையில் அமைந்து மோடி ஆட்சியின் கொடுமைகளை, அக்கிரமங்களை அவல நிலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நமக்கு வரக்கூடிய செய்தி எல்லாம் வரக்கூடிய 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தி தான் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவை காப்பாற்றுவதற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவை காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி