இந்தியாவில் புதிய சாதனை 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வருமானவரிக்கணக்குகளை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடுவுக்குள் இந்த ஆண்டு நாடு முழுவதும் 7.28 கோடி பேர் வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இது, 7.5 சதவீதம் அதிகமாகும். 2023ல் 6.77 கோடி பேர் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்து இருந்தனர்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்த 7.28 கோடி பேரில் 5.27 கோடி கணக்குகள் புதிய வரி முறையையும், 2.01 கோடி கணக்குகள் பழைய வரி முறையையும் தேர்வு செய்துள்ளனர். இதை பார்க்கும் போது சுமார் 72 சதவீத வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதே நேரத்தில் 28 சதவீதம் பேர் பழைய வரி முறையிலேயே உள்ளனர். அதே போல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூலை 31 அன்று மட்டும் ஒரே நாளில் 69.92 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு அதிகபட்சமாக 58.57 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

Related posts

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்