இந்திய விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

வேளாண்மைத் துறையில் உள்ள நீண்டகால சவால்களை எதிர்கொள்வதற்கு அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா உலகளவில் முன்னிலை வகிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால் இத்துறையானது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இருப்பினும் பாரம்பரியமான விவசாய முறைகள், கணிக்க இயலாத வானிலை, மண் சிதைவு மற்றும் திறமையற்ற நிலவள மேலாண்மை போன்ற பல்வேறு தடைகளையும் எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இத்தகைய தடைகளை எல்லாம் தாண்டி விவசாய உற்பத்தியில் புதியதொரு வரலாற்றைப் படைக்க இந்திய விவசாயிகள் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்திய விவசாயத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்பிற்கான உத்தரவாதம் ஆகியவற்றின் பொருட்டு பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. கிராமப்புறங்களில் சென்சார்கள், ட்ரோன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக விவசாயிகள் வானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி மற்றும் பூச்சிகளின் தாக்குதல் பற்றிய நிகழ்கால தரவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. நடவு அட்டவணைகள், நீர்ப்பாசன முறைகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உத்திகள் குறித்த தகவல்களை அறிந்து சூழ்நிலைக்கேற்ற முடிவுகளை எடுக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகிறது.

உதாரணமாக க்ராப்பின் (cropin) மற்றும் (satsure) போன்ற ஸ்டார்ட் ஆப்கள் உள்ளூர் தரவுகளின் அடிப்படையில் விவசாயிகளுக்குத் தேவையான பரிந்துரைகளை வழங்கும் தளங்களைக் கொண்டுள்ளன. இதன் வழியே உகந்த நடவு காலம், பயிர் வகைகள், துல்லியமான உரப் பயன்பாடு, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தும் அளவு என அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தெளிவாக வழிகாட்டுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நேர மேலாண்மை, குறைந்தபட்ச செலவுகள், அதிக மகசூல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில் ஏற்படும் பாதிப்பைக் குறைத்தல் என பல வழிகளில் நன்மை கிடைக்கிறது. இந்திய விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க பயன்பாடாக ‘‘துல்லிய விவசாயம்” திகழ்கிறது. இதில் உள்ளீடுகள் மற்றும் வளங்களைத் துல்லியமாக நிர்வகிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்தவும் செலவுகளைக் குறைக்கவும் முடிகிறது. இயந்திரங்களின் பயன்பாடு, வரலாற்றுத் தரவுகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சென்சார் தரவு ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து மண்ணின் தன்மை, ஈரப்பதம் மற்றும் பயிரின் வளர்ச்சியில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறியும் விரிவான கள வரைபடங்களை அவை உருவாக்குகின்றன. இதன் வழியே கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் விவசாயிகள் நீர்ப்பாசனம், உரங்களின் பயன்பாடு போன்றவற்றை செய்கின்றனர். தேவையான இடங்களில் மட்டும் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம். அதே நேரத்தில் தண்ணீரைச் சேமிக்கவும், ரசாயனப் பயன்பாட்டை குறைக்கவும் முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருப்பது சிறு, குறு விவசாயிகள்தான். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இத்தகைய சிறு, குறு விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும். பாரம்பரியமாக சிறுகுறு விவசாயிகளுக்கு தகவல், சந்தை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களுக்கான அணுகுமுறை குறைவாக இருப்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இத்தொழில் நுட்பமானது சிறுகுறு விவசாயிகளுக்கும் பெரும் பண்ணை விவசாயிகளுக்கும் இடையே உள்ள விவசாய அணுகுமுறையில் உள்ள இடைவெளியை வெகுவாக குறைக்கிறது.உதாரணமாக அக்ரி பஜார் மற்றும் ஏஜி நெக்ஸ்ட் போன்ற மொபைல் பயன்பாடுகள் விவசாயிகளை நேரடி கொள்முதல் செய்பவருடன் இணைத்து, உடனுக்குடன் சந்தையின் தற்போதைய விற்பனை விலைகளை தெரிவிக்கிறது. அவர்களுடன் நியாயமான ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களது லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் பயிர் தேர்வு, சாகுபடி நடைமுறைகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான பரிந்துரைகளையும் அது தெளிவாக வழங்குகிறது.

இதன் மூலம் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.இந்தியாவின் விவசாயத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக இருந்தாலும் அதன் முழுமையான பலனைக் காண பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் கல்வி அறிவு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரவுகள் குறித்த தனி உரிமை கவலைகள் போன்ற சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறு விவசாயிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பரவலாக ஏற்றுக் கொள்வதற்கு குறிப்பிடத்தக்க தடைகளை அவை ஏற்படுத்துகின்றன. மேலும் இத்தகைய தடையை உடைத்து வளர்ச்சியை நோக்கி பயணிக்க சிறு விவசாயிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்கும்படி எளிமையாக்கப்பட வேண்டும். இதற்கு அரசும், ஆராய்ச்சி நிறுவனங்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கும்பொழுது இந்திய விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகத்தான எதிர்காலத்தைக் கொண்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். ரோபோடிக்ஸ் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் மூலம் ஆட்டோமேஷன், பயிர் கண்காணிப்பு, விற்பனை மேலாண்மை துறை அபரிமிதமான வளர்ச்சி பெறும்.இந்தக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் புதுமைக்கான சாத்தியங்கள் நிகழும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதன் வழியே இந்தியா தனது விவசாயத்துறையில் தன்னிறைவைப் பெறும். எதிர்கால சந்ததியின் உணவுத் தேவைகளையும், உணவு தேவைகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
– பொறியாளர்: சுரேஷ் கோபாலகிருஷ்ணன்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு