Saturday, July 6, 2024
Home » இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க நாடாளுமன்ற தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாக இருக்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க நாடாளுமன்ற தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாக இருக்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

by Karthik Yash

சென்னை: இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருக்க வேண்டும் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: திருச்சியில் நடந்த டெல்டா மண்டலத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் திமுகவினர் திரண்டிருந்தனர். திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரைப் பயண வழியில்கூட, வாகனத்தை மறித்து சந்தித்து கோரிக்கை மனுவைத் தர முடியும் என்றும், உரிய வகையில் அது நிறைவேற்றப்படும் என்றும் தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை செல்லும் இடங்களில் எல்லாம் காண்கிறேன். திருச்சியிலும் அதனைக் கண்டேன். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடவே அல்லும் பகலும் உழைத்து வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை வழங்குகின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் அந்தத் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்கின்றனவா என்று கண்காணித்துச் செயல்படுத்தக் கூடிய ஆட்சியாக திராவிட மாடல் அரசின் ஆட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் செயலாற்றி வருகிறது. ஆட்சியின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் வழிநெடுக நின்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மனுக்களை அளித்தனர்.

இவையெல்லாம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டத்தின் நோக்கம் என்ன என்பதை பொதுமக்களே நமக்குத் தெரிவிப்பது போல இருந்தது. திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலன் தந்து வருகிறது. தங்கள் கோரிக்கை விரைந்து நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பவர்களும் உண்டு. பயன் அடைந்தவர்களிடம் திமுக அரசின் திட்டங்களின் நன்மையை எடுத்துச் சொல்வதும், கோரிக்கை மனு வழங்கியவர்களுக்கு உரிய முறையில் அதனை நிறைவேற்றித் தருவதும் கழகத்தின் சார்பிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கும் உள்ள கடமையாகும். அதனை நினைவூட்டி, களப்பணியாற்றிட அவர்களை ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக தீரர் கோட்டமாம் திருச்சி அமைந்திருந்தது.

சமூக வலைத்தளத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நம் அரசியல் எதிரிகள் பொய்களை மட்டுமே பரப்பக் கூடியவர்கள். அவர்களின் அவதூறுகளும் வதந்திகளும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. பொய்கள் புற்றீசல் போன்றவை. அவை வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானையின் பலம் உண்டு. அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும். திராவிட இயக்கத்திடம் உண்மை வரலாறு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது.

அதனால் அமைதியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறோம். சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு தலைவர் கலைஞரின் தோளில் ஏறியபோது, தந்தை பெரியாரே, திமுகவுக்கு தலைமைப் பொறுப்பை கலைஞர் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது வரலாறு. தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என்பதால், கழகத்தின் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவின் பேராதரவுடன் கழகத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர். நாவலர் அவர்கள் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்றார். அந்த நாள்தான், இன்றைய நாள்.

ஒன்றியத்தை ஆளுகின்ற ஜனநாயக விரோத – மதவாத பாஜ ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது என்பதை திருச்சியில் நடந்த கூட்டத்தில் எடுத்துரைத்தேன். திமுக அரசு செய்து வரும் சாதனைகள் தொடர வேண்டுமானால், மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டுமானால், இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருந்திட வேண்டும். இந்தியாவைக் காத்திட இந்தியா உருவாகியிருக்கிறது.

இது உண்மையான – ஒன்றுபட்ட இந்தியா. நாடாளுமன்றத் தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா. இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய இந்தியா. இவற்றை மனதில்கொண்டு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற இணைந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா முழுமையான வெற்றி பெற, தலைவர் கலைஞரை நெஞ்சில் ஏந்தும் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஓயாது உழைத்திட வேண்டும். அதற்குரிய முதற்கட்டப் பயிற்சி காவிரி டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது.

திமுகவினர் படை வீரர்களாக அணிவகுத்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், ராமநாதபுரத்தில் அமையவிருக்கிறது. உடன்பிறப்புகளே உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். வெற்றி நம்முடன் இருக்கும்.. என்றும் நிலைத்திருக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருந்திட வேண்டும்.

You may also like

Leave a Comment

ten − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi