வங்கதேசத்துடன் இந்தியா நாளை மோதல்: ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி தருமா?

புனே: 10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் புனேவில் நாளை நடைபெறும் 17வது லீக்போட்டியில் இந்தியா-வங்கதேசம் மோதுகின்றன. ரோகித்சர்மா தலைமையிலான இந்தியா முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் , 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது, 3வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. நாளை வெற்றியை தொடரும் முனைப்பில் களம் இறங்குகிறது. ரோகித் சர்மா முதல் போட்டியில் டக்அவுட் ஆனாலும் ஆப்கானுடன் சதம், பாகிஸ்தானுடன் அரைசதம் என 217 ரன் அடித்துள்ளார்.

கில், கோஹ்லி (156), கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், பாண்டியா என சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. பவுங்கில் பும்ரா 8, ஜடேஜா, குல்தீப் தலா 5 விக்கெட் எடுத்துள்ளனர். இவர்களுடன் சிராஜ் , பாண்டியா வலு சேர்க்கின்றனர். சொந்த மண்ணில் பேட்டிங், பவுலிங் என வலுவான அணியாக இந்தியா உள்ளது. நாளைய போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அஸ்வின் களம் இறங்குவார் என தெரிகிறது. இந்திய அணியினர் இன்று 2வது நாளாக புனேவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். நேற்று ரோகித்சர்மா பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டார். அவருக்கு அஸ்வின் ஆலோசனை வழங்கினார். மறுபுறம் வங்கதேசம் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்றாலும், அடுத்த 2 போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்துடன் தோல்வி அடைந்தது.

இதனால் நாளை வெற்றிபாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ,மஹ்முதுல்லா இருந்தும் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது கைவிரலில் காயம்அடைந்தகேப்டன் ஷாகிப் அல்ஹசன் பாதியில் வெளியேறினார். இந்நிலையில் காயத்தில்இருந்து மீண்டுள்ள அவர் நேற்று 45 நிமிடம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் பந்துவீசவில்லை. நாளை போட்டிக்கு முன் அவர் தயாராகி விடுவார் என அணிநிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பவுலிங்கில் தஸ்கின் அகமது தடுமாறி வருகிறார். முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாமும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. தவறுகளை சரிசெய்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் திட்டத்துடன் களம் இறங்கும். இங்கிலாந்து. தென்ஆப்ரிக்கா அணிகள் கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடும். மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. கடைசியாக ஆசிய கோப்பை தொடரில் அடைந்ததோல்விக்கு பதிலடி கொடுத்து இந்தியா 4வது வெற்றியை ருசிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார்
அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 14ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் அவுட்ஆகி பெவிலியன்திரும்பியபோது ரசிகர்கள், தேவையற்ற கோஷத்தை எழுப்பினர். இது சர்ச்சையானது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளது. அதில் ரசிகர்களின் முறையற்ற நடத்தை, தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு விசா கெடுபிடி, பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் இந்தியா வந்திருந்தாலும் அவர்களுக்கு இந்திய தூதரகத்தின் அனுமதி கிடைக்காதது உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா விவகாரத்தில் தெளிவான கொள்கை இல்லாததால் 3 போட்டிகளில் மைதானத்தில் தங்கள் நாட்டு ரசிகர்களின் ஆதரவின்றி விளையாடியதாக கூறி உள்ளது.

இதுவரை நேருக்கு நேர்…
ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 40 முறை மோதி உள்ளன. இதில் 31ல் இந்தியா, 8ல் வங்கதேசம் வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் வங்கதேசம் 3-2 முன்னிலை வகிக்கிறது. உலக கோப்பையில் இதுவரை 4 முறை மோதி உள்ளன. இதில் 2011,2015,2019 உலக கோப்பையில் இந்தியாவும், 2007ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த உலககோப்பையில் வங்கதேசழும் வென்றுள்ளது.

புனேவில் இதுவரை…
* புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இதுவரை 7 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. இந்த 7 போட்டியிலும் ஆடி உள்ள இந்தியா 4ல்(இங்கிலாந்துடன் 3, நியூசிலாந்துக்கு எதிராக 1) வென்றுள்ளது. 3 போட்டியில் (2013ல் ஆஸ்திரேலியா, 2018ல் வெஸ்ட்இண்டீஸ், 2021ல் இங்கிலாந்துக்கு எதிராக) தோல்வி அடைந்துள்ளது.
* விராட் கோஹ்லி இங்கு 7 போட்டிகளில் ஆடி 2 சதம், 3 அரைசதத்துடன் 448 ரன் அடித்துள்ளார். ராகுல் 4 போட்டியில் 188, பாண்டியா5 போட்டியில் 170ரன் எடுத்துள்ளனர்.

* பவுலிங்கில் பும்ரா 3 போட்டியில் 8, தாகூர் 7(3போட்டி) விக்கெட் எடுத்துள்ளனர்.
* பேட்டிங்கிற்கு சாதகமான இங்கு இந்தியா 2017ல் இங்கிலாந்துக்கு எதிராக 356/7ரன் எடுத்தது தான் அதிகபட்ச ஸ்கோர். இங்கு 8 முறை 300 பிளஸ் ரன் அடிக்கப்பட்டுள்ளது.
* முதலில் பேட் செய்த அணி 4 முறையும், சேசிங் அணி 3 முறையும் வென்றுள்ளன. இதில் பெரிய வித்தியாசம் இல்லாததால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை