விண்ணில் பாயும் சந்திரயான்-3 விண்கலம்…. ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் : பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி :ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.நிலவின் தென் துருவத்தில் ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், இன்று விண்ணை நோக்கி பாய உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலனை எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தை எல்எம்வி3 ராக்கெட்டில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பொருத்தினர். மேலும் சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் மூன்று நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.

விண்கலத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன இதையடுத்து இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலனுடன் எல்எம்வி 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான இருபத்து ஐந்தரை மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. 2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் தோல்வியில் முடிந்தது. தற்போது சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாயத் தயாராக உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் 14 ஜூலை 2023 எப்பொழுதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3 நமது மூன்றாவது சந்திரப் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்,” என்று ட்வீட் செய்துள்ளார். இதனிடையே பிரான்சில் பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட இருக்கும் வரலாற்று நிகழ்வையும் உலகம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு