வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவருக்கு குரங்கம்மை அறிகுறி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ஆப்ரிக்க நாடுகளில் பொதுவாக காணப்படக்கூடிய எம்பாக்ஸ் எனும் குரங்கம்மை நோய் தொற்று கடந்த 2022ல் 116 நாடுகளுக்கு பரவி 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நோய் தொற்று கடந்த மாதம் மீண்டும் ஆப்ரிக்காவை தாண்டி பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இதனால், 2022க்குப் பிறகு 2வது முறையாக பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தி உலக நாடுகளை எச்சரித்தது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, இந்தியாவில் எம்பாக்ஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு எம்பாக்ஸ் அறிகுறி இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘சந்தேகிக்கப்படும் நபர் குறிப்பிட்ட மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது நிலை சீராக உள்ளது. அவரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, எம்பாக்ஸ் தொற்று இருப்பதை உறுதி செய்ய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நோய் தொற்றை தடுக்க தேவையான வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை’ என கூறப்பட்டுள்ளது.

* முதல் முறை அல்ல
எம்பாக்ஸ் என்பது விலங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவும் வைரஸ். பெரியம்மை போல உடலில் கொப்பளங்கள், காய்ச்சல், தலைவலியை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் 2 அல்லது 4 வாரத்தில் குணமாகலாம். இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 2022ல் முதல் முறையாக பரவியது. கடந்த மார்ச் மாதம் கடைசியாக ஒருவருக்கு எம்பாக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 30 பேருக்கு எம்பாக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்