இன்று I.N.D.I.A கூட்டணியின் பரப்புரை குழுவின் 2ம் கூட்டம்…சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனை!!

டெல்லி : I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் பரப்புரை குழுவின் கூட்டம் இன்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்த, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘I.N.D.I.A ’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது. அந்த தலைவர்கள் கூட்டத்தில், ‘I.N.D.I.A ’ கூட்டணியின் எதிர்கால திட்டங்கள், இந்தாண்டு இறுதியில் நடக்கும் 5 மாநில பேரவை தேர்தல், அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தல் வியூகங்களை வகுக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது, ‘I.N.D.I.A’ கூட்டணியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாகச் செயல்படும். இந்நிலையில் ‘I.N.D.I.A ’ கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் நாளை (செப். 13) டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்பவார் பிரிவு) தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் I.N.D.I.A கூட்டணியின் விஷன் டாக்குமெண்ட் எனப்படும் தொலைநோக்கு அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. காந்தி பிறந்த நாளான அக் 2ம் தேதி அந்த அறிக்கையை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே I.N.D.I.A கூட்டணி அமைத்துள்ள பரப்புரை குழுவின் முதல் கூட்டம் செப் 6ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. பரப்புரை குழுவின் 2ம் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குர்தீப் சிங் சப்பால், திருச்சி சிவா, திருமாவளவன் சஞ்சய் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் டெல்லி, பாட்னா, சென்னை, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்